தமிழகத்தில் பண்டிகை காலங்கள் அடுத்தடுத்து நெருங்கி வரும் சூழலில், மக்கள் அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தும் அரிசி, சமையல் எண்ணெய், பூண்டு மற்றும் காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை கடந்த இரண்டு மாதங்களில் 20 சதவீதம் வரை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இது ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்களின் மாதாந்திர பட்ஜெட்டில் பெரும் துண்டை ஏற்படுத்தியுள்ளது.
மளிகைப் பொருட்களில் காரத்திற்குப் பயன்படும் மிளகாய் வற்றல் கிலோ ரூ.220-லிருந்து தரத்திற்கு ஏற்ப ரூ.270 முதல் ரூ.300 வரையிலும், தனியா ரூ.150-லிருந்து ரூ.220 ஆகவும் உயர்ந்துள்ளது. குறிப்பாக, கிலோ ரூ.150-க்கு விற்கப்பட்ட பூண்டு தடாலடியாக ரூ.280 முதல் ரூ.300 வரை இரட்டிப்பு விலைக்கு விற்கப்படுகிறது. எளிய மக்கள் அதிகம் பயன்படுத்தும் பாமாயில் லிட்டருக்கு ரூ.150-லிருந்து ரூ.185 ஆக எகிறியுள்ளது. இனிப்புக்கு பயன்படும் வெல்லம் கிலோ ரூ.50-லிருந்து ரூ.100 ஆக உயர்ந்துள்ளதுடன், முந்திரி கிலோ ரூ.700-லிருந்து ரூ.950 ஆகவும், பாதாம் பருப்பு ரூ.250-லிருந்து ரூ.1,200 ஆகவும் கிடுகிடுவென உயர்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேவேளையில், மற்ற பொருட்களுக்கு மத்தியில் கிலோ ரூ.70 வரை விற்ற சர்க்கரை விலை தற்போது கிலோ ரூ.15.55 ஆக குறைந்து மக்களுக்கு சற்று ஆறுதல் அளித்துள்ளது.
அன்றாட உணவான அரிசி விலையும் கிலோவுக்கு ரூ.8 முதல் ரூ.15 வரை உயர்ந்துள்ளது. மொத்த சந்தையில் 26 கிலோ கொண்ட அரிசி மூட்டை ரகத்திற்கு ஏற்ப ரூ.300 முதல் ரூ.500 வரை அதிகரித்துள்ளது. ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் விளைச்சல் குறைந்து தமிழகத்திற்கு நெல் மற்றும் அரிசி வரத்து குறைந்ததே இதற்கு முக்கிய காரணமாகும். இந்த விலை உயர்வு வரும் டிசம்பர் மாதம் வரை நீடிக்க வாய்ப்புள்ளதாகவும், புதிய அரிசி வரத்து தொடங்கிய பின்னரே குறையும் என்றும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதனுடன் சேர்ந்து பெரிய வெங்காயம், சின்ன வெங்காயம், கேரட், பீன்ஸ், தக்காளி மற்றும் உருளைக்கிழங்கு உள்ளிட்ட காய்கறிகளின் விலையும் கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.15 வரை அதிகரித்துள்ளது. அத்தியாவசியப் பொருட்களின் தொடர் விலை உயர்வை சமாளிக்க முடியாமல் பொதுமக்கள் திணறி வருவதால், வரவிருக்கும் பண்டிகைக் காலத்தைக் கருத்தில் கொண்டு மளிகைப் பொருட்களை ரேஷன் கடைகள் மூலம் மலிவு விலையில் அரசு விற்பனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.



