எத்தியோப்பியாவின் உயரிய விருதான ‘தி கிரேட் ஆனர் நிஷான் ஆஃப் எத்தியோப்பியா’ பெறும் முதல் உலகத் தலைவர் என்ற பெருமையை பிரதமர் நரேந்திர மோடி பெற்றுள்ளார்.
நேற்று எத்தியோப்பியாவின் உயரிய குடிமக்கள் விருது ‘தி கிரேட் ஆனர் நிஷான் ஆஃப் எத்தியோப்பியா’ விருது பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்டது. இந்த விருதை, எத்தியோப்பியா பிரதமர் அபி அஹ்மத் அலி வழங்கினார். அடிஸ் இன்டர்நேஷனல் கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்ற சிறப்பு விழாவில், பிரதமர் மோடிக்கு இந்த உயரிய மரியாதை அளிக்கப்பட்டது.
இந்தியா–எத்தியோப்பியா உறவுகளை வலுப்படுத்துவதில் பிரதமர் மோடி அளித்த சிறப்பான பங்களிப்பு மற்றும் உலகளாவிய தலைவராக அவரது தொலைநோக்கு பார்வையுடனான தலைமையேற்பாடு ஆகியவற்றை பாராட்டி இந்த விருது வழங்கப்பட்டதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
எத்தியோப்பியாவின் உயரிய விருதான ‘தி கிரேட் ஆனர் நிஷான் ஆஃப் எத்தியோப்பியா’ பெறும் முதல் உலகத் தலைவர் / அரசுத் தலைவர் என்ற பெருமையை பிரதமர் நரேந்திர மோடி பெற்றுள்ளார்.
இந்த விருது கிடைத்ததை தொடர்ந்து, சமூக வலைதளம் X-இல் பதிவிட்ட பிரதமர் மோடி,
“‘தி கிரேட் ஆனர் நிஷான் ஆஃப் எத்தியோப்பியா’ விருதை பெற்றதில் பெருமை கொள்கிறேன். இந்த மரியாதையை இந்தியாவின் 140 கோடி மக்களுக்கு அர்ப்பணிக்கிறேன்” என தெரிவித்தார்.
விருது வழங்கும் நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி, உலகின் மிகவும் பழமையான நாகரிகங்களில் ஒன்றான எத்தியோப்பியாவிலிருந்து இந்த உயரிய மரியாதையை பெறுவது தனக்கு மிகுந்த பெருமையும், பணிவும், நன்றியுணர்வும் அளிப்பதாக குறிப்பிட்டார்.
இந்த விருதுக்காக எத்தியோப்பியா பிரதமர் அபி அஹ்மத் மற்றும் அந்நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி தனது ஆழ்ந்த நன்றி தெரிவித்தார். மேலும், தேசிய ஒற்றுமை, நிலைத்த வளர்ச்சி மற்றும் அனைவரையும் உள்ளடக்கும் முன்னேற்றம் ஆகியவற்றை மேம்படுத்த பிரதமர் அபி அஹ்மத் மேற்கொண்டு வரும் முயற்சிகளையும் அவர் பாராட்டினார்.
நாடு கட்டியெழுப்புவதில் அறிவின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய பிரதமர் மோடி, கடந்த நூற்றாண்டுக்கு மேலாக இந்திய ஆசிரியர்கள் எத்தியோப்பியாவின் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சிக்கு பங்களித்து வருவது பெருமை அளிப்பதாக தெரிவித்தார்.
இந்த விருதை, காலம் காலமாக இந்தியா–எத்தியோப்பியா உறவுகளை வளர்த்த இந்தியர்களுக்கும் எத்தியோப்பியர்களுக்கும் அர்ப்பணிப்பதாக கூறிய பிரதமர் மோடி, 1.4 பில்லியன் இந்திய மக்களின் சார்பில் இந்த மரியாதைக்காக இதயம் கனிந்த நன்றியை தெரிவித்தார்.
இந்த விருது வழங்கப்பட்டிருப்பது, இந்தியா–எத்தியோப்பியா இடையேயான நெருங்கிய கூட்டாண்மையில் ஒரு முக்கிய மைல்கல்லாகவும், குளோபல் சவுத் (Global South) நாடுகளின் நேர்மையான செயல்திட்டங்களை மேலும் வலுப்படுத்தும் ஒரு முக்கிய தருணமாகவும் அமைந்துள்ளதாக மத்திய அரசின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More : சூப்பர் திட்டம்…! பிரதமரின் சூரிய சக்தி வீடு… வீடுகளுக்கு மின்சாரக் கட்டணம் இல்லை…!



