புதுவையில் பாக்குமுடையான் பேட்டில் இருக்கின்ற இதயா கல்லூரியின் ஆண்டு விழா நேற்று மாலை நடைபெற்றது. இந்த விழாவில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், முதலமைச்சர் ரங்கசாமி உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர் அவர்களை மேடைக்கு அழைத்துச் சென்ற மாணவிகள், பட்டுப்புடவை, அலங்கார நகை உள்ளிட்டவற்றை அணிந்து கருப்பு கூலிங் கிளாஸ் அணிந்து, சினிமா பாடல்களுக்கு நடனம் ஆடி உற்சாகமாக அழைத்துச் சென்றனர்.
இதனை தொடர்ந்து, கல்லூரி மாணவி ரெஹானா என்பவர் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஓவியத்தை தலைகீழாக வரைந்து அசத்தியிருந்தார். இந்த ஓவியத்தை பெற்றுக் கொண்ட ஆளுநரும், முதலமைச்சரும் மாணவியை வெகுவாக பாராட்டி மகிழ்ந்தனர்.
இதனைத் தொடர்ந்து மேடையில் உரையாற்றிய தமிழிசை சௌந்தரராஜன், தடைகளை கடந்து பெண்கள் முன்னேற வேண்டும் என்னை போன்றவர்கள் மேடையில் இருக்கிறோம் என்றால் பல தடைகளை கடந்து வந்திருக்கிறோம். தடைகளை தவிடுபொடியாக்கும் தன்னம்பிக்கை இருக்க வேண்டும் என்று கூறினார்.
அரசியல் என்பது ஒட்டுமொத்தமாக பெண்களுக்கான துறை இல்லை. பெண்கள் அதில் முன்னேற வேண்டுமென்றால் அது சிரமங்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை வரலாம். பாதை ஒன்றும் மலர் பாதை இல்லை. முற்களாலும், கற்களாலும் கால்களை குத்தி கிழிக்கும். ஆனாலும் அதிலும் வேகமாக முன்னேறினால் முன்னுக்கு வர இயலும் என்று தமிழிசை சௌந்தரராஜன் பேசினார். அதிலும் குறிப்பாக அதிகமாக பெண்கள் அரசியலுக்கு வர வேண்டும். படித்த பெண்கள் அரசியலுக்கு வரவேண்டும் அப்படி வந்தால் அரசியல் தூய்மையாகும் என்று பேசியுள்ளார்.