ஐபிஎல் 2025 சீசனில் மும்பை அணி தங்களுடைய கடைசி லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணியிடம் தோல்வியை தழுவி புள்ளிப் பட்டியலில் 4-வது இடத்தை பெற்றுள்ளது. இதன் மூலம் மும்பை அணி குவாலிபையர் 1 போட்டிக்கு தகுதி பெரும் வாய்ப்பை இழந்தது. இதனால் எலிமினேட்டர் சுற்றில் மும்பை அணி களமிறங்கவுள்ளது. இது நாக் அவுட் போட்டி என்பதால் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், பஞ்சாப்புக்கு எதிரான தோல்வி குறித்து பேசிய ஹர்திக் பாண்டியா, ”அணியின் பேட்ஸ்மேன்கள் கூடுதலாக 20 ரன்கள் அடிக்க முயற்சி செய்ய வேண்டும். இந்த மாதிரியான ஆடுகளத்தில் நாங்கள் 20 ரன்கள் குறைவாக அடித்து விட்டோம். நாங்கள் சில நாட்களாக நல்ல விதமான கிரிக்கெட்டை ஆடி வந்தோம். ஆனால், இந்த முறை முடியவில்லை. நாங்கள் இதுவரை 5 கோப்பைகளை வென்றுள்ளோம். 5 முறைகளையும் இந்த பயணம் கடுமையாக தான் இருந்தது.
நான் எனது வீரர்களுக்கு சொல்லிக் கொள்வது ஒன்றே ஒன்றுதான். தவறு என்று பாடம் கற்றுக் கொள்ளுங்கள். தற்போது நாக் அவுட் போட்டிகளை எதிர்நோக்கி உள்ளோம். எங்கள் அணியில் என்ன பிரச்சனை இருக்கிறது என்பது குறித்து விவாதிக்க உள்ளோம். இன்று ஆடுகளத்தில் பெரிய அளவு மாற்றம் ஏற்படவில்லை. இதனால் தான் அஸ்வினியை பயன்படுத்தினோம். எங்களுடைய பவுலிங்கும் எடுபடவில்லை.
பஞ்சாப் அணி வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை ஆடினார்கள். இனிவரும் காலங்களில் நல்ல கிரிக்கெட்டை விளையாட முயற்சிப்போம். எங்களுடைய பேட்டிங்கிற்கு எது சரியான ஃபார்முலாக அமையும் என்பது குறித்து யோசிப்போம். தற்போது நாங்கள் பதற்றம் அடையவில்லை. 4 நாட்களுக்கு முன்பு எப்படி சூழல் இருந்ததோ, அதே போல் ஒரு சூழலில் தான் மீண்டும் நாங்கள் இருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.