பொதுவாக அம்மனுக்கு தான் மாவிளக்கு ஏற்றி வழிபடுவது வழக்கம். அதுவும் வெள்ளிக்கிழமை, ஆடி மாதம், திருவிழா ஆகிய காலங்களில் தான் மாவிளக்கு ஏற்றுவார்கள். ஆனால் அம்மனை போல் பெருமாளுக்கும் மாவிளக்கு ஏற்றி வழிபடும் வழக்கம் உள்ளது. திருப்பதி ஏழுமலையானை நினைத்து வீடுகளில் மாவிளக்கு ஏற்றும் வழக்கம் உள்ளது.
புரட்டாசி மாதத்தில் பெருமாளுக்கு மாவிளக்கு வைத்து வழிபடுபவர்கள், வழிபட வேண்டும் என நினைப்பவர்கள் முக்கியமான கவனிக்க வேண்டிய மற்றும் கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள் சில உள்ளன.இந்த முறையின் படி மாவிளக்கு ஏற்றி வழிபடுவதால் மட்டுமே பெருமாளின் அருள் நமக்கு முழுவதுமாக கிடைக்கும்.
புரட்டாசி நாளை புதன்கிழமை (செப்.17) பிறக்கிறது. புரட்டாசி மாதம் முழுவதுமே பெருமாள் வழிபாட்டிற்கு உரிய மாதமாகும். இருந்தாலும் பெரும்பாலானவர்கள் கடுமையான விரதத்தை கடைபிடித்து, வழிபாடுகள், பூஜைகள் ஆகியவற்றை செய்வது புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் தான். புரட்டாசி மாதத்தின் அனைத்து சனிக்கிழமைகளும் சிறப்புடையது என்றாலும் ஒவ்வொரு சனிக்கிழமையிலும் ஒவ்வொரு விதமான வழிபாடுகளை செய்வது சிறப்பானதாகும். இதனால் பெருமாளின் அருளுடன், செல்வ செழிப்பு, மகிழ்ச்சி, முன்னேற்றம், மோட்சம் என அனைத்தும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. புரட்டாசி மாதத்தில் பெருமாளை பக்தி சிரத்தையுடன் வழிபட்டு, அவரது நாமங்களை சொல்பவர்களுக்கு நிச்சயமாக வைகுண்ட பதவி கிடைக்கும் என புராணங்கள் சொல்கின்றன.ஜ்க்ஹ்ம்
பெருமாளை குலதெய்வமாக கொண்டவர்கள், பெருமாளிடம் முக்கியமான வேண்டுதல் வைத்திருப்பவர்கள், பெருமாளின் தீவிர பக்தர்கள் புரட்டாசி சனிக்கிழமைகளில் வீடுகளில் பெருமாளுக்கு மாவிளக்கு ஏற்றி வழிபடும் வழக்கம் உள்ளது. அப்படி மாவிளக்கு ஏற்றுபவர்கள் எந்த சனிக்கிழமையில் வேண்டுமானாலும் மாவிளக்கு வைத்து வழிபடலாம் என நினைத்து செய்யக் கூடாது. இது நமக்கு தெய்வீக அருளை தருவதற்கு பதிலாக எதிர்மறை விளைவுகளையே தரும். மாவிளக்கு வழிபாடு செய்வதற்கு குறிப்பிட்ட நாள், கணக்கு இருக்கிறது. இந்த முறைகளை தெரிந்து கொண்டு மாவிளக்கு இட்டு வழிபடுவது சிறப்பானதாக இருக்கும்.
புரட்டாசி மாதத்தில் முன்னோர்களை வழிபடுவதற்கான மகாளய பட்சமும் இணைந்து வரும். மகாளய பக்ஷத்தில் மாவிளக்கு போட கூடாது. மகாளய பட்சம் காலத்தில் முன்னோர்களையே பிரதானமாக கருதி வழிபட வேண்டும். முன்னோர்களை வழிபட்ட பிறகு தான், வழக்கமான தெய்வ வழிபாட்டை செய்ய வேண்டும். அதே சமயம், தெய்வங்களுக்குரிய முக்கிய விரதங்கள் இருப்பது, வழிபாடுகளை செய்வது ஆகியவற்றை செய்யக் கூடாது என்ற முறை உள்ளது. செப்டம்பர் 8ம் தேதி துவங்கி, 21ம் தேதி மகாளய அமாவாசை வரை மகாளய பட்சம் உள்ளது. இதனால் அதற்கு பிறகு தான் பெருமாளுக்குரிய வழிபாட்டினை நாம் மேற்கொள்ள வேண்டும். நவராத்திரி காலத்தில் மாவிளக்கு போடுவதால் தவறில்லை.
பெருமாளுக்கு மாவிளக்கு போடுவதில் மற்றொரு வழக்கமும் கடைபிடிக்கப்படுகிறது. அதாவது திருப்பதியில் கொடியேற்றம் ஆன பிறகு வீடுகளில் மாவிளக்கு ஏற்ற கூடாது என்ற வழக்கமும் உள்ளது. தீர்த்தவாரி முடிந்தாலே பிரம்மோற்சவம் நிறைவடைந்து விட்டது என்று தான் அர்த்தம். அதனால் அன்று மாலை பெருமாளுக்கு மாவிளக்கு போடலாம்.