2026 தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக விஜய் களத்தில் இறங்கியுள்ளதால் 2026 தேர்தல் களம் பரபரப்பாகவே பார்க்கப்படுகிறது. கரூர் சம்பவத்தால் முடங்கிய தவெக இப்போது மீண்டும் தீவிர அரசியலில் இறங்கியுள்ளது. குறிப்பாக சமீப காலமாகவே விஜய் கட்சியில் முக்கிய தலைவர்கள் பலரும் இணைந்த வண்ணம் உள்ளனர்.
இதனால் தமிழக வெற்றி கழகம் கட்சிக்கு நாளுக்கு நாள் பலம் கூடிக் கொண்டே செல்கிறது. இதேபோல் புதுச்சேரி மாநிலத்தில் நடைபெறும் தேர்தலிலும் தவெக தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் ஆதவ் அர்ஜுனா மற்றும் புஸ்ஸி ஆனந்த் ஆகியோர் புதுச்சேரியில் போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
புஸ்ஸி ஆனந்த் புதுச்சேரியில் பிறந்து வளர்ந்தவர். அம்மாநில அரசியலை நன்கு அறிந்தவர். புதுச்சேரி முன்னேற்ற காங்கிரஸ் சார்பில் 2006 சட்டமன்றத் தேர்தலில் புஸ்சி தொகுதியில் போட்டியிட்டு முதல்முறை எம்.எல்.ஏ ஆனார். அதன்பிறகு கட்சியில் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக வெளியேறி 2011 தேர்தலில் உப்பளம் சட்டமன்றத் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு தோல்வியை தழுவினார்.
பின்னர் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் இணைந்து அதே உப்பளம் தொகுதியில் 2016 தேர்தலில் மீண்டும் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். அதன்பிறகு நடிகர் விஜய் உடன் தொடர்ச்சியாக இயங்கி தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளராக தற்போது பதவி வகித்து வருகிறார். அதன்படி இந்த தேர்தலிலும் உப்பளத்தில் ஆனந்த் போட்டியிடலாம் என கூறப்படுகிறது. அதே சமயம் ஆதவ் அர்ஜுனா சார்லஸ் மார்ட்டினுக்கு எதிராக களமிறங்கலாம் என்று கூறப்படுகிறது.
Read more: நகைப்பிரியர்கள் கவனத்திற்கு.. இன்று தங்கம் விலை உயர்ந்ததா? சரிந்ததா? இன்றைய நிலவரம் என்ன?



