ஈரானின் புதிய உச்சத் தலைவராகப் பொறுப்பேற்றிருந்த முஜ்தபா அலி காமெனியின் உடல்நிலை குறித்து பல்வேறு சந்தேகங்கள் நிலவி வரும் நிலையில், அவர் ஒரு மதக் கல்வி அமர்வுக்குத் தலைமை தாங்கும் அபூர்வமான வீடியோ ஒன்று வெளியாகி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
ஈரானின் அதிகாரப்பூர்வ Fars News Agency பகிர்ந்த இந்த வீடியோவில், முஜ்தபா காமெனியின் குரல் முதல் முறையாகப் பொதுவெளியில் கேட்கப்பட்டுள்ளது. இதில் ஈரானிய ஆட்சியின் “இஸ்லாமிய பாதுகாப்பு மாதிரி” குறித்து அவர் மாணவர்களுடன் விவாதிக்கிறார். மாணவரின் ஆய்வறிக்கையை கேட்டுவிட்டு, அதற்கு 20-க்கு 19.5 மதிப்பெண்கள் வழங்கி, அந்தப் பணி ‘குறையற்றது’ எனப் பாராட்டுகிறார். இருப்பினும், இந்த வீடியோ எப்போது பதிவு செய்யப்பட்டது என்பது தெளிவாகத் தெரியவில்லை.
கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்திய தாக்குதலில், ஈரானின் முன்னாள் உச்சத் தலைவர் அலி காமெனி கொல்லப்பட்டார். அதன் பிறகு 56 வயதான முஜ்தபா நாட்டின் புதிய உச்சத் தலைவராகப் பொறுப்பேற்றார். மேற்கு ஆசியப் போர் தொடங்கியதில் இருந்து அவர் பொதுவெளியில் தோன்றாததால், அவரது உடல்நிலை குறித்த கேள்விகள் எழுந்துள்ளன.
அந்தத் தாக்குதலில் முஜ்தபாவின் முகம் மற்றும் கால்களில் பலத்த காயம் ஏற்பட்டதாகவும், அவர் உருக்குலைந்து போனதாகவும் பல அமெரிக்க அதிகாரிகளும், ஊடகங்களும் தெரிவித்தன. எனினும், அவர் மனதளவில் மிகவும் கூர்மையாக இருப்பதாகவும், மூத்த அதிகாரிகளுடனான கூட்டங்களில் ஆடியோ கான்பரன்ஸ் மூலம் பங்கேற்று முக்கிய முடிவுகளை எடுத்து வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான பதற்றம் மீண்டும் உச்சத்தை எட்டியுள்ள நேரத்தில் இந்த வீடியோ வெளியாகியுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான முதற்கட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் சமீபத்தில் காலாவதியான நிலையில், ஈரானுடன் இனி பேச்சுவார்த்தை இல்லை என அமெரிக்க அதிபர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் கருவூலச் செயலாளர் ஸ்காட் பெஸ்ஸென்ட் ஈரானின் நிதி ஆதாரங்களை முடக்கும் நோக்கில் கடுமையான பொருளாதாரத் தடைகளை அறிவித்துள்ளார்.
உலகின் எண்ணெய் மற்றும் எரிவாயு வர்த்தகத்தில் ஐந்தில் ஒரு பங்கைக் கையாளும் மிக முக்கியமான ‘ஹார்முஸ் ஜலசந்தி வழியான கப்பல் போக்குவரத்தை மீட்டெடுப்பது இரு நாடுகளுக்கும் இடையிலான முக்கிய மோதல் புள்ளிகளாக தொடர்கிறது. மேலும், ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளும் உலக அரங்கில் தனிமைப்படுத்தப்படும் என அமெரிக்கா எச்சரித்துள்ளதால் சூழல் மேலும் தீவிரமடைந்துள்ளது.



