வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில், பண்ருட்டி தொகுதி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. சத்யா பன்னீர்செல்வம் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி தொகுதியில் 2016-ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அதிமுக பெண் எம்எல்ஏ சத்யா பன்னீர்செல்வம். இவரது கணவர் பன்னீர் செல்வம் 2011-16 அதிமுக ஆட்சியில் நகராட்சி தலைவராக இருந்தபோது பண்ருட்டி பேருந்து நிலையத்தில் இருசக்கர வாகனம் நிறுத்துமிடத்தில் டெண்டர் விடும் பணி நடைபெற்றது. அந்த டெண்டரில் ரூ.20 லட்சம் பண மோசடியில் ஈடுபட்டதாக கடலூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் முன்னாள் எம்எல்ஏ கணவர் பன்னீர்செல்வம் முதல் குற்றவாளியாவும், அப்போதைய நகராட்சி ஆணையராக இருந்த பெருமாள் என்பவர் இரண்டாவது குற்றவாளியாக சேர்த்து மொத்தம் 6 பேர் இந்த வழக்கில் கொண்டுவரப்பட்டனர். தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் சத்யா பன்னீர்செல்வம் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி இருந்தனர். அப்போது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் சத்யா பன்னீர்செல்வம் வீட்டில் இன்று மீண்டும் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சோதனை நடைபெற்றது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில், பண்ருட்டி தொகுதி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. சத்யா பன்னீர்செல்வம் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று ஜூலை 18-ந் தேதி சோதனை நடத்தினர். காலையிலே நடைபெறும் சோதனையால் பண்ரூட்டியில் பரபரப்பு ஏற்பட்டது.
அதிமுக தொண்டர்களும் ஆதரவாளர்களும் அவரது வீட்டருகே குவிந்து வருகின்றனர். தேர்தல் நெருங்கி வரும் சமயத்தில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் நடத்தி வரும் இந்த சோதனை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Read more: உயரமான பகுதியில் ஆகாஷ் பிரைம் வான் பாதுகாப்பு அமைப்பின் சோதனை வெற்றி…!



