கடன் வாங்கியவர்கள் கடனை கட்ட தவறினால், கடனில் வாங்கிய மொபைல் போன்களை ரிமோட் மூலம் பூட்ட வங்கிகளுக்கு அனுமதி வழங்கும் திட்டத்தை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) பரிசீலித்து வருகிறது. கடன் கட்ட தவறுவதை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முக்கிய அம்சங்கள்: ஹோம் கிரெடிட் ஃபைனான்ஸ் 2024 ஆய்வின் படி, இந்தியாவில் விற்கப்படும் மொபைல் போன்களில் 30% க்கும் அதிகமானவை சிறிய தனிநபர் கடனில் வாங்கப்படுகின்றன. அதாவது, சாதாரண வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் “இன்ஸ்டால்மெண்ட் திட்டம்” (EMI) மூலமே மொபைல் போன்களை வாங்குகின்றனர். குறிப்பாக, ஸ்மார்ட்போன்கள் அதிக விலை கொண்டுள்ளதால், சிறிய கடன் திட்டங்கள் விற்பனையை ஊக்குவிக்கின்றன.
இந்தியா உலகின் மிகப்பெரிய மொபைல் சந்தைகளில் ஒன்று. TRAIதரவுப்படி, 116 கோடிக்கும் மேற்பட்ட மொபைல் இணைப்புகள் தற்போது செயல்பாட்டில் உள்ளன. இது, மொபைல் சந்தை எவ்வளவு ஆழமாக ஒவ்வொரு குடும்பத்திற்கும், ஒவ்வொரு தனிநபருக்கும் சென்றடைந்துள்ளது என்பதைக் காட்டுகிறது. அதனால், மொபைல் போன்களை அடிப்படையாகக் கொண்டு கடன் வசூல் நடவடிக்கைகள் எடுக்கப்படும் போது, அது கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையை நேரடியாக பாதிக்கக் கூடும்.
வங்கிகள் அல்லது NBFCகள் (Non-Banking Finance Companies) மொபைல் போன் EMI திட்டம் வழங்கும்போது, கடனாளியின் சாதனத்தில் ஒரு சிறப்பு செயலி நிறுவப்படும். இந்த செயலி வழியாக, கடனை கட்ட தவறினால், போனின் செயல்பாடு நிறுத்தப்படும் (lock mode). அழைப்புகள், இணையம், ஆப்கள் ஆகியவை தடை செய்யப்படும். சில நேரங்களில் “உங்கள் கடனைச் செலுத்துங்கள்” என்ற எச்சரிக்கை திரை மட்டுமே தோன்றும். இது, கடனாளி தவிர்க்க முடியாத நிலை உருவாக்கி, திருப்பிச் செலுத்துவதற்கு அழுத்தம் கொடுக்கும் கருவியாக செயல்படும்.
கடந்த ஆண்டு RBI, இந்த செயல்முறையை தற்காலிகமாக நிறுத்த வங்கிகளுக்கு அறிவுறுத்தியது. இப்போது, மீண்டும் இந்த நடைமுறைக்கு அதிகாரபூர்வ விதிகள் கொண்டு வரப்படும். RBI விரைவில் தனது Fair Practices Code-ஐ புதுப்பித்து, அதில்: வாடிக்கையாளரின் முன் ஒப்புதல் (Consent) கட்டாயமாக்கப்படும். வங்கிகள் அல்லது NBFCகள், போனில் உள்ள தனிப்பட்ட தரவுகளை அணுகக் கூடாது என்று விதி அமல்படுத்தப்படும். “Lock” செய்வது கடன் திருப்பிச் செலுத்துதலை உறுதி செய்யும் ஒரு வரையறுக்கப்பட்ட கருவி மட்டுமே ஆகும்.
யார் பலன் அடைவார்கள்? பஜாஜ் ஃபைனான்ஸ், DMI ஃபைனான்ஸ், சோழமண்டலம் ஃபைனான்ஸ் போன்ற முக்கிய நுகர்வோர் கடன் நிறுவனங்கள் இதன் மூலம் பயனடையலாம். வங்கி போல முழுமையான சேவை இல்லை, என்றாலும் சிறிய கடன்கள் வீட்டுப் பொருட்கள், மொபைல், தனிப்பட்ட கடன் போன்றவற்றை வழங்குவதில் மிகப் பெரிய பங்கு வகிக்கின்றன. புதிய விதிமுறைகள் இவர்களுக்கு கடன் வசூலை எளிதாக்கும் வாய்ப்பு தருகிறது.
இந்தியாவில் விற்கப்படும் மின்னணு பொருட்களுக்கான EMI திட்டங்களில் 85% பங்கு NBFCகளுக்கே சொந்தம். வங்கிகள் பெரும்பாலும் பெரிய கடன்கள் (Housing Loan, Car Loan, Education Loan) மீது கவனம் செலுத்துகின்றன. ஆனால் NBFCகள் வீட்டு உபயோகப் பொருட்கள், ஸ்மார்ட்போன்கள், பைக்குகள் போன்ற சிறிய பொருட்களுக்கான விரைவான கடன்களை வழங்குகின்றன. இதனால், வாடிக்கையாளர்கள் எளிதில் கடன் பெறும் வாய்ப்பு கிடைத்தாலும், NBFCகளுக்கு வசூல் அபாயம் அதிகரிக்கிறது. RBI-யின் “Remote Lock” அனுமதி NBFCக்களுக்கு சிறந்த பாதுகாப்பு கருவி ஆக இருக்கும்.
நுகர்வோர் உரிமை சிக்கல்கள்: வழக்கறிஞர்களும் நுகர்வோர் அமைப்புகளும் கடுமையான கவலை வெளியிட்டுள்ளனர். “இது தொழில்நுட்பத்தை ஆயுதமாக்கி, பயனர்களை கல்வி, வேலை, நிதிச் சேவைகள் போன்ற முக்கிய பயன்பாடுகளில் இருந்து தடுத்து விடும் அபாயம் உள்ளது,” என CashlessConsumer நிறுவனர் ஸ்ரீகாந்த் எல். எச்சரித்துள்ளார். RBI-யின் இந்த புதிய முயற்சி செயல்படுத்தப்பட்டால், வங்கிகளின் வசூல் திறன் உயரும்; அதே நேரத்தில் மில்லியன் கணக்கான வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படலாம் என்ற இருமுக நிலைமை உருவாகும்.
Read more: ஷூட்டிங்கில் பயங்கர விபத்து..!! கோமா நிலையில் விஜய் ஆண்டனி..!! என்ன ஆச்சு..? திரையுலகமே ஷாக்..!!