முக்கிய ரெப்போ விகிதங்களில் மாற்றமின்றி தற்போதைய நிலையை பராமரிக்க மத்திய அரசு செய்துள்ளதாக ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்,. இன்று காலை இந்திய ரிசர்வ் வங்கியின் நாணயக் கொள்கைக் குழு (MPC)எடுத்த முடிவை பகிர்ந்துகொண்டு, அனைத்து உறுப்பினர்களும் ஒருமனதாக விகிதங்களை மாற்றாமல் வைக்க முடிவு செய்ததாக அவர் தெரிவித்தார்.
தற்போது ரெப்போ விகிதம் 5.5%, மேலும் மார்ஜினல் ஸ்டாண்டிங் ஃபெசிலிட்டி (MSF) விகிதம் மற்றும் வங்கி விகிதம் 5.75% மட்டுமே தக்கவைக்கப்படுவதாக RBI அறிவித்துள்ளது. MPC தனது கொள்கை நிலைப்பாட்டை நடுநிலை (Neutral) நிலையில் பராமரிக்க விரும்புகிறது. இதன் பொருட்டு வீடு, வாகன, தனிநபர் கடன்கள் மற்றும் தங்க நகை கடன்களுக்கு வட்டி விகிதங்களில் எந்த மாற்றமும் ஏற்படாது.
இந்த முடிவு இந்திய வாடிக்கையாளர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கும். ஏனெனில் கடந்த பிப்ரவரி மாதம் ரெப்போ வட்டி 0.25% குறைக்கப்பட்டிருந்தது. அதன்பின் ஏப்ரல் மாதத்தில் மேலும் 0.25% குறைத்து, வட்டி விகிதம் 6% ஆக இருந்தது. கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற MPC கூட்டத்தில் 50 அடிப்படை புள்ளிகள் (0.5%) குறைத்ததன் மூலம் ரெப்போ வட்டி விகிதம் 5.5% ஆகி, இவ்வாண்டில் மொத்தம் 1% குறைந்தது.
இதனைத் தொடர்ந்து பல வங்கிகள் வீட்டுக் கடன், வாகன கடன், தங்க நகை கடன் வட்டி விகிதங்களை கையாளத் துவங்கின. ஆகஸ்ட் மாத MPC கூட்டத்தில் ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் அறிவிக்கப்படவில்லை. இதற்கு முன், அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தை குறைத்ததால் ரிசர்வ் வங்கியும் அதே மாதிரியான நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது.
ரெப்போ வட்டி விகிதம் என்றால் என்ன? ரிசர்வ் வங்கி மற்ற வங்கிகளுக்குக் கடன் வழங்கும் வட்டி விகிதம் தான் ரெப்போ விகிதமாகும். ரெப்போ விகிதம் குறைக்கப்பட்டால் நாம் செலுத்தும் இஎம்ஐ குறையும். அதேநேரம் நமது சேமிப்புக் கணக்குகளில் கிடைக்கும் வட்டியும் குறையும். மறுபுறம் ரெப்போ வட்டி விகிதம் அதிகரிக்கப்பட்டால் நாம் செலுத்தும் கடன் இஎம்ஐ தொகையும் அதிகரிக்கும்.



