பிரபல சமூக ஊடக தளமான ரெடிட் (Reddit) பல நாடுகளில், குறிப்பாக அமெரிக்கா மற்றும் இந்தியாவில், இன்று செயலிழப்பை (outage) சந்தித்தது. இதை உறுதிப்படுத்திய அந்நிறுவனம் பிரச்சனையை சரிசெய்ய நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்துள்ளது.
பயனர்கள் புகார்
டவுன்டிடெக்டர் (Downdetector) எனும் தொழில்நுட்பத் தள செயலிழப்புகளை கண்காணிக்கும் இணையதளத்தின் தகவலின்படி, அமெரிக்காவில் மட்டும் 20,000-க்கும் மேற்பட்ட பயனர்கள் ரெடிட் பயன்பாட்டில் சிக்கல் ஏற்பட்டதாக புகார் அளித்துள்ளனர்.
இந்தியாவில், இந்த எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை மாலை உச்சத்தில் 521 ஆக இருந்தது.
ரெடிட் நிறுவனன் விளக்கம்
இந்த செயலிழப்பு குறித்து ரெடிட் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.. தனது இணையதளத்தின் நிலை (status) பகுதியில் வெளியிட்ட அறிக்கையில் “ நாங்கள் பிரச்சனையை கண்டறிந்துள்ளோம், அதை சரிசெய்ய ஒரு தீர்வு செயல்படுத்தப்படுகிறது. மேலும் ஏதேனும் சிக்கல்கள் ஏற்பட்டால் கண்காணிப்பு தொடர்கிறது.” என்று தெரிவித்துள்ளது.. அதாவது, பிரச்சினைக்கான தீர்வு நடைமுறையில் உள்ளது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
அண்மையில் பிற பெரிய நிறுவனங்களும் செயலிழப்பை சந்தித்தன
இந்த ரெடிட் செயலிழப்பு, சில வாரங்களுக்கு முன் நடந்த அமேசான் வெப் சர்வீசஸ் (AWS) தளத்தின் பெரும் நெட்வொர்க் தடங்கலுக்குப் பிறகு ஏற்பட்டுள்ளது.
அந்த தடங்கல் பல பயன்பாடுகள் (apps) — அதில் ரெடிட் உட்பட — செயலிழக்க காரணமாக இருந்தது.
அதேபோல், கடந்த வாரம் மைக்ரோசாஃப்ட் அஜூர் (Microsoft Azure) நெட்வொர்க் செயலிழப்பும் ஏற்பட்டது. இதனால் சமீப காலமாக தொழில்நுட்ப உலகம் பல இடையூறுகளை எதிர்கொண்டு வருகிறது.
அமேசான் AWS முடக்கம்
அக்டோபர் 20 அன்று நடந்த AWS முடக்கம் உலக இணையத்தின் மூன்றில் ஒரு பகுதியை பாதித்தது. அதற்குக் காரணம் நோர்தர்ன் வர்ஜீனியாவில் உள்ள AWS தரவுத்தள மையத்தில் ஏற்பட்ட DNS (Domain Name System) பிழை என கூறப்பட்டது.
DNS என்பது இணையதள பெயர்களை அவற்றின் IP முகவரிகளுடன் இணைக்கும் ஒரு வரைபடம் போல செயல்படும் அமைப்பாகும். அந்த அமைப்பு பாதிக்கப்பட்டதால், பல பயன்பாடுகள் தங்களது தரவை அணுக முடியாமல் போனது.
அமேசான் பிரச்சனையை கண்டறிந்து நடவடிக்கை எடுத்தது. பின்னர் இந்த பிரச்சனை சில மணி நேரங்களில் சரி செய்யப்பட்டது.. ஆனால் சேவை முற்றிலும் வழக்கநிலைக்கு திரும்ப மாலை நேரம் வரை எடுத்தது.
மைக்ரோசாஃப்ட் அஜூர் முடக்கம்
கடந்த புதன்கிழமை, மைக்ரோசாஃப்ட் அஜூர் நெட்வொர்க் அமெரிக்காவின் கிழக்கு பகுதியை (Eastern US) பெரிதும் பாதித்தது. மைக்ரோசாஃப்ட் வெளியிட்ட அறிக்கையில், DNS பிரச்சினைகள் இதற்குக் காரணம் எனவும், இப்போது சேவைகள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பத் தொடங்கியுள்ளன எனவும் தெரிவித்தது.
டவுன்டிடெக்டர் தகவலின் படி, அப்போது 18,000-க்கும் மேற்பட்ட பயனர்கள் அஜூர் சேவைகளை அணுக முடியவில்லை. பின்னர் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் இதை உறுதிப்படுத்தி, சமீபத்திய கட்டமைப்பு மாற்றமே (configuration change) இந்த செயலிழப்புக்கு காரணம் என விளக்கியது.



