இந்திய தபால் துறையில் நீண்டகாலமாக செயல்பட்டு வந்த பதிவு தபால் சேவையும், ரயில் மெயில் சேவையும் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் ரத்து செய்யப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தபால் முறை கடந்த 1849 ஆம் ஆண்டு நவம்பர் 1 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தியாவில் தொடங்கப்பட்ட அதே நாளில்தான் லண்டனிலும் பதிவுத் தபால் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. சாதாரண தபால்கள் பெரும்பாலும் அதிகளவில் புழக்கத்தில் இருந்த காலகட்டத்தில் முக்கிய ஆவணங்களை அனுப்பிவைப்பதில் வாடிக்கையாளர்களுக்கு சந்தேகங்கள், சிக்கல்கள் இருந்தது. இந்த நிலையில், அதைக் கருத்தில் கொண்டுதான் பதிவு அஞ்சல் சேவை தொடங்கப்பட்டது.
இதில், தபால் உரியவரிடம் கையெழுத்துடன் சேர்த்த பிறகு அனுப்புநருக்கு ‘ஒப்புகை சீட்டு’ அனுப்பப்படும். இது, குறைந்த செலவில், முக்கியமான ஆவணங்கள், வர்த்தக தகவல்கள் அனுப்ப ஏராளமானோர் பயன்படுத்திய சேவையாகும். பதிவு தபாலுக்கு பிறகு, விரைவில் செல்வதற்காக “ஸ்பீடு போஸ்ட்” அறிமுகப்படுத்தப்பட்டது. இது பதிவு தபால் போன்று இருந்தாலும், தூரத்தை பொருத்து கட்டணத்தில் வேறுபாடுடன் உள்ளது.
தற்போது, ஸ்பீடு போஸ்ட் சேவையே அதிகம் மக்களால் விரும்பப்படுகிறது. இந்த சூழலில் செப்டம்பர் 2025 முதல் பதிவு தபால் சேவையை முழுமையாக நிறுத்த உள்ளதாக தபால் சேவை துறை அறிவித்துள்ளது. அதே போல் ரயில் மெயில் சேவையில் ரத்து செய்யப்பட உள்ளது. இந்தியாவிற்குள் தரைவழியாக மட்டுமே தபால்கள் பிற மாநிலங்களுக்கு பட்டுவாடா செய்யப்பட உள்ளது.
காரணம் என்னவென்றால், பதிவு தபால் சேவையின் பயன்பாடு குறைந்துள்ளது.
ஸ்பீடு போஸ்ட் மற்றும் கூரியர் சேவைகள் வளர்ச்சி அடைந்தூள்ளது. செலவுக் குறைப்பு மற்றும் செயல்திறன் மேம்பாடு நோக்கில் தபால் துறை இந்த முடிவை எடுத்துள்ளது. இந்த நடவடிக்கைக்கு தபால் ஊழியர் சங்கங்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளன. முக்கியமாக அவர்கள் கூறுவது: இந்த முடிவால் ஊழியர் பணிநீக்கம் ஏற்படும். கிராமப்புற மக்கள் இன்னும் பதிவு தபாலை நம்பிக்கையுடன் பயன்படுத்துகிறார்கள், எனவே இந்த சேவையை மேம்படுத்தி தொடர்ந்து வைக்க வேண்டும் என்பதே அவர்கள் கோரிக்கை.
இதனிடையே தமிழ் நாட்டில் உள்ள அனைத்து தபால் அலுவலகங்களிலும் பயன்பாட்டில் உள்ள மென்பொருளை புதிய தொழில் நுட்பத்துடன் தரம் உயர்த்தும் பணிகள் ஆகஸ்ட் 2ல் நடக்கவுள்ளன. அன்று ஒரு நாள் அனைத்து தபால் அலுவலகங்களிலும், சிறு சேமிப்பு கணக்குகளில் பணம் எடுப்பது, முதலீடு செய்வது போன்ற எந்த விதமான பண பரிவர்த்தனை சேவைகளும் செய்ய இயலாது என தபால் துறை சார்ப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
Read more: அதிகரிக்கும் ஆணவ கொலை: தென் தமிழகத்தில் அரசு இதை செய்ய வேண்டும்..!! – பா. ரஞ்சித் பரபர அறிக்கை