தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் விவரங்களை பொதுவெளியில் வெளியிட அரசு தடை விதித்துள்ளது.
தகவல் பெறும் உரிமைச் சட்டம்-2005 பிரிவு 6(2)-இன் படி, தகவலுக்காக கோரிக்கை செய்கிற விண்ணப்பதாரர் ஒருவர், அந்தத் தகவலினைக் கோருவதற்கான காரணத்தையோ அல்லது அவரை தொடர்பு கொள்வதற்காகத் தேவை இல்லாத விவரங்களைத் தவிர, தனிப்பட்ட பிற விவரங்கள் எவற்றையும் அளிக்க கோரிக்கை வைக்க முடியாது. மத்திய அரசின் 08.01.2014 நாளிட்ட அலுவலகக் குறிப்பாணையில், பொது அதிகார அமைப்பின் இணையதளத்தில், தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005-இன் கீழ் விண்ணப்பம் அளிக்கும் விண்ணப்பதாரர்களின் விவரங்களை அதாவது பெயர், பதவி, முகவரி, மின்னஞ்சல் முகவரி மற்றும் தொலைபேசி மற்றும் கைபேசி எண்கள் ஆகியவற்றை வெளியிடக்கூடாது என்பதற்கான அறிவுறுத்தங்களையும் வெளியிட்டுள்ளது.
தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பம் அளிக்கும் விண்ணப்பதாரர்களின் அடையாளங்கள் பொதுவெளியில் வெளியிடப்படுவதாக பல்வேறு புகார்கள் அரசுக்கு வரப்பெறுவதால், விண்ணப்பதாரர்களின் பெயர், பதவி, முகவரி, மின்னஞ்சல் முகவரி தொலைபேசி எண். மற்றும் கைபேசி எண்கள் ஆகியவற்றின் விவரங்களை வெளியிடக்கூடாது வலியுறுத்தப்பட்டுள்ள மேற்குறிப்பிட்ட அறிவுறுத்தங்களை தவறாது கடைபிடிக்குமாறும், விண்ணப்பதாரரின் விவரங்களை தங்களது துறையின் இணையதளத்திலோ அல்லது வேறு வழிமுறைகளிலோ வெளியிடுவதை தவிர்க்குமாறு வலியுறுத்தப்படுகிறது.
இது குறித்து அரசுக்கோ அல்லது தமிழ்நாடு தகவல் ஆணையத்திற்கோ மேற்கொண்டு புகார்கள் வராத வண்ணம் செயல்படும் அனைத்து பொதுத் தகவல் அலுவலர்கள் மற்றும் முதல் மேல்முறை அலுவலர்களுக்கும் இதன் மூலம் மீண்டும் அறிவுறுத்தப்படுகிறது என தமிழக அரசு தெரிவித்துள்ளது .



