சீன–அமெரிக்க பாடகர் மற்றும் பாடலாசிரியர் வாங் லீஹோம் நடத்திய செங்க்டூ (Chengdu) நகரக் கச்சேரியில், மனித வடிவ ரோபோக்கள் (Humanoid Robots) முதன்முறையாக மேடையில் பிரம்மாண்டமாக தோன்றிய நிகழ்வு இணையத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த கச்சேரியில், 6 மனித வடிவ ரோபோக்கள் வாங் லீஹோமுடன் இணைந்து நடனம் ஆடின.
வெள்ளி நிற மின்னும் உடைகளில் அலங்கரிக்கப்பட்ட அந்த ரோபோக்கள், அவர் பாடிய “Open Fire” என்ற பாடலின் இசைத் தாளத்துக்கு சரியாகக் கை அலைச்சல்கள், கால் அசைவுகள், திருப்பங்கள் மற்றும் தாவல்கள் என துல்லியமாக நடனமாடின.
அவை இயந்திரமாகத் தோன்றாமல், இயல்பாகவும் மென்மையாகவும் அசைந்ததால், பார்ப்பவர்களுக்கு உண்மையான பின்னணி நடனக் கலைஞர்கள் போலவே தெரிந்தன.
உண்மையான பிரமிக்க வைக்கும் நிகழ்வு இறுதிக் கட்டத்தில் அரங்கேறியது. அந்த 6 ரோபோக்கள் ஒரே நேரத்தில் வெப்ஸ்டர் ஃபிளிப் என்ற சாகசத்தைச் செய்தன. இது நிகழ்ச்சி நடைபெற்ற இடத்திலும் இணையத்திலும் பெரும் கரவொலியைப் பெற்றுத் தந்தது. பார்வையாளர்கள், பலரும், “முதலில் இது ரோபோக்கள் என்று தெரியவே இல்லை” என்று கூறும் அளவுக்கு, அந்த நடனம் நிஜமாகவும் அற்புதமாகவும் இருந்தது என்று கூறினர். இந்த நிகழ்ச்சி, இசை மேடைகளில் ரோபோட்டுகள் மனிதர்களுடன் இணைந்து கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் புதிய காலம் தொடங்கியதைக் காட்டுகிறது.
இந்த நிகழ்ச்சியில் நடனம் ஆடிய மனித வடிவ ரோபோக்கள் , சீனாவின் ஹாங்சோ நகரத்தைச் சேர்ந்த Unitree Robotics என்ற தொழில்நுட்ப நிறுவனத்தால் உருவாக்கப்பட்டவை. இந்த நிறுவனம் மனிதர்களைப் போல இயங்கும், அதிக நுட்பமான இயக்கங்களைக் கொண்ட ரோபோட்களை உருவாக்குவதில் பெயர் பெற்றது.
இந்த நடன நிகழ்ச்சியின் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வேகமாக பரவி, உலகம் முழுவதும் பெரும் ஆச்சரியத்தையும் விவாதத்தையும் ஏற்படுத்தின.
இந்த வைரல் வீடியோவை பார்த்த எலான் மஸ்க் கூட அதற்கு எதிர்வினை தெரிவித்தார்.
“இப்போது சீனாவில் ரோபோக்கள் எல்லாவற்றையும் செய்கின்றன, மேடையில் தொழில்முறை நடனக் கலைஞர்களைப் போல நடனமாடுகின்றன” என்ற பதிவை அவர் X-இல் பகிர்ந்து, அதற்கு அற்புதம் என்ற ஒரே வார்த்தையால் தனது கருத்தை வெளிப்படுத்தினார்.
சீன சமூக ஊடக பயனர்களும் பாராட்டு
இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற வசந்தகால கொண்டாட்ட நிகழ்ச்சியில் ரோபோக்கள் எளிய நடன அசைவுகள் மட்டுமே செய்தன; ஆனால் இப்போது, அவை தைரியமாகவும் துல்லியமாகவும் அக்ரோபாட்டிக் திருப்பங்கள் (flip) செய்யும் அளவிற்கு முன்னேறியுள்ளன என பலர் குறிப்பிட்டனர்.
சிலர் இந்த நேரடி நிகழ்ச்சியை “மின்சாரம் பாய்ந்தது போல உற்சாகமானது” என வர்ணித்தனர். ரோபோட்களின் ஸ்டைலான தோற்றமும் மென்மையான நடன அசைவுகளும் பெரிதும் பாராட்டப்பட்டன.
பின்னணி நடனக் கலைஞர்களாக இருந்து, இணையத்தில் வைரலான பிரபலங்கள் வரை, இந்த மனித உருவ ரோபோக்கள் நேரடி பொழுதுபோக்கின் எதிர்காலம் முழுமையாக வந்துவிட்டது என்பதை நிரூபித்துள்ளன.



