காதலியுடன் பேசிக்கொண்டிருந்தபோது, திடீரென அவரது தாய் வந்ததால், தப்பிக்க நினைத்து மாடியில் இருந்து கீழே குதித்த மாணவன், உயிரிழந்த சம்பவம் சேலத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்தவர் சஞ்சய். சேலம் கொல்லப்பட்டி பகுதியில் இயங்கிவரும் தனியார் சட்டக்கல்லூரியில் பயின்று வரும் இவர், அதே பகுதியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் தங்கிவந்துள்ளார். இந்தநிலையில், நேற்று நள்ளிரவு அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து கீழே விழுந்ததில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கன்னங்குறிச்சி போலீசார், மாணவரின் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து சேலம் மாநகர காவல் ஆணையர் லாவண்யா நேரில் விசாரணை மேற்கொண்டார். அப்போது, சக மாணவி ஒருவரை சஞ்சய் காதலித்து வந்ததாகவும், சம்பவத்தன்று மாடியில் இருவரும் பேசிக்கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், திடீரென காதலியின் தாயார் மாடிக்கு வந்ததால், பதற்றத்தில் மாடியில் இருந்து கீழே குதித்தப்போது, மாணவர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.