போர்ச்சுகீசிய சூப்பர் ஸ்டார் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, சவூதி ப்ரோ லீக் கிளப்பான அல்நஸ்ர் உடன் தனது ஒப்பந்தத்தை இரண்டு ஆண்டுகள் மேலும் நீட்டித்துள்ளார். கடந்த பல வாரங்களாக அவரின் எதிர்காலத்தைச் சுற்றியுள்ள வதந்திகளுக்கு இதன்மூலம் முடிவு கிடைத்துள்ளது. இதனால் 42 வயது வரை கால்பந்து விளையாடி இன்னும் பல்வேறு சாதனைகள் படைக்க இருக்கிறார்.
வெயிலில் நனைந்த கடற்கரையோரத்தில் ரொனால்டோ நடந்து சென்று “அல்நாசர்ஃபாரெவர்” என்று அறிவிப்பது போன்ற சினிமா டீஸருடன் இந்த செய்தியை சவூதி ப்ரோ லீக் கிளப் உறுதிப்படுத்தியுள்ளது. இது, சவூதி அராபியாவின் முன்னணி கிளப்பான அல்நஸ்ர் மீது அவர் கொண்டுள்ள புதிய அர்ப்பணிப்பையும் உறுதியையும் வலியுறுத்துகிறது.
தி சன் செய்தித்தாளின் அறிக்கையின்படி, கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது ஒப்பந்தத்தின் கீழ் முதலில் சுமார் £24.5 மில்லியன் (சுமார் ரூ.260 கோடி) அளவிலான கையொப்ப தொகையை பெறுகிறார். அவர் ஒப்பந்தத்தின் இரண்டாவது ஆண்டிலும் விளையாடும் நிலையில், அந்த தொகை £38 மில்லியனுக்கு (சுமார் ரூ.403 கோடி) அதிகரிக்கவுள்ளது. இது அவரது விளையாட்டு வாழ்க்கையின் மிகவும் முக்கியமான மற்றும் வருமானமளிக்கும் ஒப்பந்தங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
இதேபோல், கிறிஸ்டியானோ ரொனால்டோவின் ஆண்டுக்கான அடிப்படை சம்பளமும் உயரும். அது £178 மில்லியன் (சுமார் ரூ.1,887 கோடி) ஆகும். இது தினசரி சராசரியாக சுமார் £488,000 (சுமார் ரூ.5.17 கோடி) ஆகும். இதுமட்டுமல்லாமல், ரொனால்டோ விளையாட்டு திறன் மற்றும் வெற்றியுடன் இணைந்த பல போனஸ்களையும் பெறுகிறார். கோல்டன் பூட் (Golden Boot) வென்றால், அவருக்கு கூடுதல் £4 மில்லியன் (சுமார் ரூ.42 கோடி) வழங்கப்படும். அல்நஸ்ர் சவூதி ப்ரோ லீக் டைட்டிலை கைப்பற்றினால், அவர் மேலும் £8 மில்லியன் (சுமார் ரூ.85 கோடி) சம்பாதிப்பார்.
மேலும் இந்த ஒப்பந்தத்துடன் ரொனால்டோவுக்கு அல்நஸ்ர் கிளப்பில் சுமார் £33 மில்லியன் (சுமார் ரூ.350 கோடி) மதிப்புடைய 15% பங்குகள் வழங்கப்பட்டுள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இதனால், அவருக்கு வெறும் வீரராக மட்டுமல்லாமல், கிளப்பின் ஒரு முக்கிய பங்குதாரராகவும் இடம் பெற வாய்ப்பு கிடைத்துள்ளது.
மாங்செஸ்டர் யுனைடெட்டிலிருந்து 2022 ஆம் ஆண்டு இறுதியில் அல்நஸ்ர் கிளப்புக்கு வருகை தந்த பிறகு, கிறிஸ்டியானோ ரொனால்டோ உலகின் அதிக சம்பளம் பெறும் விளையாட்டு வீரராக தனது இடத்தை தக்கவைத்து வருகிறார். கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து போர்ப்ஸ் (Forbes) இதனை ஆண்டு தோறும் உறுதிப்படுத்தி வருகிறது.
அல்நஸ்ர் உடன் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் நீட்டிக்கப்பட்ட ஒப்பந்தம், அதில் உள்ள அனைத்து கூறுகளையும் கருத்தில் எடுத்தால், அவருக்கு ரூ.5,300 கோடியையும் மீறும் வருமானத்தை வழங்கக்கூடும். அவரது அடிப்படை சம்பளம் மட்டுமே வருடத்திற்கு £178 மில்லியன் (சுமார் ரூ.1,887 கோடி) ஆகும், இதன் அடிப்படையில் இரண்டு ஆண்டுகளில் மொத்தம் சுமார் ரூ.3,773 கோடி ஆகும். இவை நேரடி வருமானமாகக் கருதும்போது, ரொனால்டோவின் மொத்த வருமானம் சுமார் ரூ.4,654 கோடி ஆகும். இருப்பினும், ரூ.5,300 கோடி க்கும் மேல் என்று சில அறிக்கைகள் கூறுகின்றன.
ஐந்து முறை பலோன் டிஆர் விருது வென்ற ரொனால்டோ, கடந்த 2022ஆம் ஆண்டு இறுதியில் அல்-நாசர் அணிக்கு சென்றார். இவருக்கு வருடத்திற்கு 20 கோடி அமெரிக்க டாலர் சம்பளமாக வழங்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.