ரஷ்யா நாடு முழுவதும் வாட்ஸ்அப் (WhatsApp) சமூக வலைதள சேவையைத் தடை செய்துள்ளது. உள்நாட்டில் உருவாக்கப்பட்ட செயலிகளை ஊக்குவிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு சில நாட்களுக்கு முன்பு, சட்ட விதிமீறல்கள் நடந்ததாக கூறி, ரஷ்யாவின் இணைய கண்காணிப்பு அமைப்பு டெலிகிராம் (Telegram) செயலியையும் தடை செய்திருந்தது.
இந்தத் தடைக்கு பதிலளித்த வாட்ஸ்அப், இது 10 கோடிக்கும் மேற்பட்ட பயனர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கை எனக் கடுமையாக விமர்சித்துள்ளது. வாட்ஸ்அப் தனது எக்ஸ் (X) சமூக வலைதள பதிவில், “இன்று ரஷ்ய அரசு, அரசு கட்டுப்பாட்டில் உள்ள கண்காணிப்பு செயலியை மக்கள் பயன்படுத்த வற்புறுத்தும் நோக்கில், வாட்ஸ்அப்பை முழுமையாக தடை செய்ய முயற்சித்துள்ளது. 10 கோடிக்கும் அதிகமான பயனர்களை தனிப்பட்ட மற்றும் பாதுகாப்பான தகவல் பரிமாற்றத்திலிருந்து துண்டிப்பது ஒரு பின்னடைவு. இது ரஷ்ய மக்களுக்கு மேலும் குறைந்த பாதுகாப்பையே ஏற்படுத்தும். பயனர்கள் தொடர்ந்து இணைந்திருக்க நாம் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம்” என்று தெரிவித்துள்ளது.
இதற்கு முன், ரஷ்ய சட்டங்களை பின்பற்றாவிட்டால் பல இணைய தளங்கள் மெதுவாக்கப்படலாம் அல்லது முற்றிலும் தடுக்கப்படலாம் என ரஷ்யா எச்சரிக்கை விடுத்திருந்தது. அந்த சட்டங்களின்படி, ரஷ்ய பயனர்களின் தரவுகள் நாட்டுக்குள்ளேயே சேமிக்கப்பட வேண்டும், மேலும் அரசு “குற்றச்செயல்” அல்லது “தீவிரவாதம்” என குறிக்கும் உள்ளடக்கங்களை தடுக்க அந்த தளங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மனித உரிமை அமைப்புகளும், அரசின் விமர்சகர்களும், இந்த நடவடிக்கை இணைய செயல்பாடுகளை கட்டுப்படுத்த கிரெம்லின் மேற்கொள்ளும் விரிவான முயற்சியின் ஒரு பகுதியாகும் எனக் குற்றம் சாட்டுகின்றனர். இணையத்தில் மக்களின் உரிமைகளையும், சுதந்திர தகவல் பரிமாற்றத்தையும் கட்டுப்படுத்தும் போக்காக இதை அவர்கள் பார்க்கின்றனர்.
Read More : அதிக ஊழல் நிறைந்த நாடுகள் எவை? 2025 ஆம் ஆண்டில் இந்தியா எந்த இடத்தில் உள்ளது?



