புற்றுநோய் சிகிச்சை வரலாற்றில் ஒரு முக்கியமான முன்னேற்றமாக, mRNA அடிப்படையிலான உலகின் முதல் புற்றுநோய் தடுப்பூசியை ரஷ்யாவின் கமலேயா தேசிய ஆராய்ச்சி மையம் உருவாக்கியுள்ளது. இதற்கு முன்பு ஸ்புட்னிக் V கோவிட் தடுப்பூசியையும் உருவாக்கியதன் மூலம் புகழ்பெற்ற இந்த நிறுவனம், தற்போது புற்றுநோய் எதிர்ப்பு mRNA தடுப்பூசியை உருவாக்கி, மனித பரிசோதனைக்கு தயாராகியுள்ளது.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கூறுகையில், “இந்த புதிய தடுப்பூசி புற்றுநோயை எதிர்க்கும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டு, கடைசி கட்ட ஆய்வுகளில் உள்ளது. விரைவில் நோயாளிகளுக்கு இது கிடைக்கத் தொடங்கும்” என்றார். கமலேயா மையத்தின் இயக்குநர் அலெக்சாண்டர் கின்ட்ஸ்பர்க் தெரிவித்ததாவது:
இந்த mRNA தடுப்பூசி, நோயாளியின் புற்றுநோய் கட்டியின் மரபணு அமைப்பை அடிப்படையாகக் கொண்டு தனிப்பயனாக்கப்படும். இது ஒவ்வொரு நோயாளிக்கும் தனித்தனியாக வடிவமைக்கப்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. 2025 செப்டம்பர் – அக்டோபர் மாதங்களில் சோதனை ரீதியான பயன்பாடுகள் தொடங்கும் என்றார்.
மெலனோமா புற்றுநோய்க்கு தீர்வா? இந்த mRNA தடுப்பூசி முதற்கட்டமாக மெலனோமா எனப்படும் தோல் புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்கும் நோக்கத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது, ஆரம்பத்திலேயே கண்டறியப்பட்டால் பரவலைத் தடுக்க முடியும், ஆனால் சிகிச்சை இன்றி விட்டால் உடலின் பிற பகுதிகளுக்கும் பரவி உயிருக்கு ஆபத்தானதாக மாறக்கூடியது.
mRNA (Messenger RNA) என்பது மரபணு தகவல்களை செல்களில் உள்ள புரத உற்பத்தி அமைப்புகளுக்கு கொண்டு செல்லும் மூலக்கூறு. தடுப்பூசி வடிவத்தில், இது நோயை உருவாக்கும் ஆன்டிஜென்களை உருவாக்க செல்களை பயிற்றுவிக்கிறது, நோயாளியின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும்.
இந்த முன்னேற்றம் மட்டுமல்லாது, உலகம் முழுக்க கேன்சருக்கு எதிராக பல்வேறு மருந்துகள் மற்றும் சிகிச்சை முறைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. 2024ஆம் ஆண்டில், அமெரிக்காவின் Memorial Sloan Kettering Cancer Center மருத்துவமனையில் நடத்தப்பட்ட ஒரு சோதனையில், dostarlimab என்ற மருந்தை வாங்கிய 18 குடல் புற்றுநோயாளிகள் அனைவரும் முழுமையாக குணமடைந்தனர். இந்த மருந்து கொடுக்கப்பட்ட பின்னர், எந்தவொரு கீமோதெரபி சிகிச்சையும் இல்லாமல், அனைத்து நோயாளிகளும் நோயற்றதாக தங்கள் ஸ்கேன் முடிவுகளில் உறுதி செய்யப்பட்டுள்ளனர்.
ஒளி அதிர்வுகளைப் பயன்படுத்தி கேன்சரைக் குணப்படுத்தும் முயற்சி
டெக்சாஸில் உள்ள ரைஸ் பல்கலைக்கழகம் மற்றும் டெக்சாஸ் ஏ & எம் ஆகியவை இணைந்து நடத்திய மற்றொரு ஆய்வில், ஒளி தூண்டுதலை பயன்படுத்தி பிளாஸ்மோன் அதிர்வுகள் மூலம் புற்றுநோய் செல்களை அழிக்கக்கூடிய ஒரு புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கினர். இந்த முறையில் 99% செல்கள் அழிக்கப்பட்டுள்ளன. சில எலிகளுக்கு மெலனோமா புற்றுநோய் இருந்தபோதிலும், சிகிச்சைக்குப் பிறகு அவர்கள் முழுமையாக குணம் அடைந்துள்ளனர்.
பல ஆண்டுகளாக மனித சமூகத்தைக் களைத்துவிட்ட கேன்சருக்கு எதிராக உலகம் முழுவதும் பரந்த ஆய்வுகள் நடைபெற்றுவரும் சூழலில், ரஷ்யா உருவாக்கிய mRNA புற்றுநோய் தடுப்பூசி ஒரு முக்கிய திருப்புமுனையாக கருதப்படுகிறது. இது நோயாளிக்கு தனிப்பயனாக வழங்கப்படக்கூடியது என்பதாலேயே இந்தத் தடுப்பூசி எதிர்காலத்தில் கேன்சர் சிகிச்சையின் ஒரு புதிய திசையை உருவாக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
Read more: பாலைவன தூசி துகள்கள் இந்திய வானிலையைத் தீர்மானிக்கிறதா..? – ஆய்வில் அதிர்ச்சி தகவல்