2021ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் ஆட்சி மாறி தாலிபான் அரசாங்கம் உருவான பிறகு, எந்த ஒரு நாடும் அதனை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கவில்லை. இந்நிலையில், ரஷ்யா, தாலிபான் அரசை முதல் முறையாக அங்கீகரித்த நாடாக பெயரெடுத்துள்ளது.
இந்தத் தகவலை ரஷிய வெளியுறவு அமைச்சகம் உறுதி செய்துள்ளது. அதன்படி, ரஷ்யாவின் துணை வெளியுறவு அமைச்சர் ஆண்ட்ரி ருடென்கோ, தாலிபான் அரசால் நியமிக்கப்பட்ட புதிய ஆப்கான் தூதர் குல் ஹசன் ஹாசனிடம், அதிகாரப்பூர்வ அங்கீகார ஆவணங்களை வழங்கியுள்ளார். இதையடுத்து, மாஸ்கோவில் உள்ள ஆப்கான் தூதரகத்தில், முந்தைய ஆட்சியின் தேசியக் கொடி அகற்றப்பட்டு, தாலிபானின் வெள்ளை கொடி உயர்த்தப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
ரஷ்யா வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், “இந்த அங்கீகாரம் இரு நாடுகளுக்கும் இடையே பல துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்தும்,”
என்று தெரிவித்துள்ளது. இதற்கு பதிலளித்த தாலிபான் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தகி, “இது இருதரப்பு உறவுகளில் ஒரு வரலாற்று வெற்றியாகும்,”
என்று பெருமிதம் தெரிவித்தார்.
உலக நாடுகள், தாலிபான் ஆட்சியில் பெண்கள் கல்வி, மனித உரிமைகள், ஊடக சுதந்திரம் உள்ளிட்ட முக்கிய பிரிவுகள் அந்தர்ஜாதி தரங்களுக்கு எதிராக செயல்படுகின்றன என குற்றம் சாட்டி வருகின்றன. இதனால், இதுவரை எந்த நாடும் தாலிபான் அரசை அங்கீகரிக்க முன்வரவில்லை.
இந்த நிலையில் ரஷ்யா எடுக்கப்பட்டுள்ள இந்த முக்கிய முடிவு, சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. பல நாடுகள் இந்த அங்கீகாரத்தை விமர்சித்து வரும் நிலையில், பாரசீக வளைகுடா நாடுகள், சீனா, பாகிஸ்தான் போன்றவை அடுத்ததாக என்ன முடிவெடுக்கும் என்பதிலே அனைவரும் கவனம் செலுத்தி வருகின்றனர்.