S.I.R. பணிகள் சரியாக நடக்கவில்லை.. மக்கள் வாக்குரிமை பறிபோகும் அபாயம்..! – முதலமைச்சர் ஸ்டாலின் குற்றச்சாட்டு..

tamilnadu cm mk stalin

தமிழகத்தில் நடைபெற்று வரும் S.I.R. (Summary Intensive Revision) எனப்படும் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் குறித்து, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார். இதனை சரியாகவும், முழுமையாகவும் செய்யவில்லை என்றால், ஆயிரக்கணக்கான வாக்காளர்களின் வாக்குரிமை பறிக்கப்படும் அபாயம் உள்ளது என்று அவர் எச்சரித்துள்ளார்.


இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள காணொளியில், “நம் எதிர்ப்புகளையும் மீறி, S.I.R. பணிகள் தொடங்கிவிட்டது. மக்கள் நிறைய பேருக்கு, S.I.R. பற்றி இன்னும் முழுதாகத் தெரியவில்லை. தேர்தலுக்குச் சில மாதங்களே இருக்கும் நிலையில், இதை அவசர அவசரமாக செய்வது சரியாக இருக்காது என்பதுதான் நம்முடைய நிலைப்பாடு.

தேர்தல் ஆணையத்துடன் கூட்டு சேர்ந்து, வாக்காளர் பட்டியலில் பா.ஜ.க. எப்படியெல்லாம் மோசடி செய்திருக்கிறது என்று, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தி, ஏற்கனவே விளக்கியிருக்கிறார். கேரள மாநிலத்தின் முதலமைச்சர் பினராயி விஜயன், மேற்கு வங்கத்தின் முதலமைச்சர் மமதா பானர்ஜியும்கூட இந்த S.I.R.-ஐத் எதிர்க்கிறார்கள்.

நாமும் இது சதி என்று குறிப்பிட்டு எதிர்த்தோம். அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டித் தீர்மானம் போட்டோம். உச்சநீதிமன்றத்தில் வழக்கு போட்டிருக்கிறோம். அதற்கு முன்பு, S.I.R.-க்காக வழங்கப்படும் கணக்கீட்டுப் படிவத்திலேயே எத்தனை பிரச்சினைகள், குழப்பங்கள் இருக்கிறது என்று உங்களுடன் பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன். உங்களில் சிலருக்கு இந்த ஃபார்ம் வந்து சேர்ந்திருக்கும்.

இதில், முதலில் நம்முடைய விவரங்களைக் கேட்கிறார்கள். அதற்கு அடுத்தபடியாக, முந்தைய வாக்காளர் திருத்தப் பட்டியலில் உள்ள வாக்காளரின் உறவினரின் பெயர் கேட்கப்பட்டிருக்கிறது. வாக்காளரின் உறவினர் பெயர் என்று சொல்லப்பட்டிருக்கும் இடத்தில், முதலில் பெயரும், பிறகு, வாக்காளரின் புகைப்பட அடையாள அட்டை எண் என்றும் கேட்கப்பட்டிருக்கிறது. மூன்றாவதாக, மீண்டும் உறவினர் பெயர் என்று கேட்கப்பட்டிருக்கிறது.

முதலில் யார் பெயரை எழுத வேண்டும்? எந்த வாக்காளர் விண்ணப்பிக்கிறாரோ அவர் பெயரா? அல்லது உறவினர் பெயரா? சிறிய தவறு இருந்தால் கூட, தேர்தல் ஆணையம் அந்தப் படிவத்தை ஏற்றுக் கொள்ளாமல், வாக்காளர் பட்டியலில் இருந்து பெயரை நீக்கிடும் ஆபத்து இருக்கிறது. நன்றாகப் படித்தவருக்கு கூட இந்தக் கணக்கீட்டுப் படிவத்தைப் பார்த்தால் தலை சுற்றிவிடும்.

இந்தப் படிவத்தில் வாக்காளரின் புகைப்படத்தை அச்சிட்டு, “தற்போதைய புகைப்படத்தை ஒட்டவும்” என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஒருவேளை, போட்டோ ஒட்டவில்லை என்றால், என்ன நடக்கும்? வாக்குரிமை பறிக்கப்படுமா? பறிக்கப்படாதா? தொகுதியின் வாக்காளர் பதிவு அதிகாரி, அதாவது ERO கையில்தான் இந்த முடிவு இருக்கிறது, இவர்கள் அனைவரும் ஒரே மாதிரியான முடிவை எடுப்பார்கள் என்று சொல்ல முடியாது. இவ்வாறு, முதல் கோணல் முற்றிலும் கோணல் என்ற கதையாக, அனைத்து இடத்திலும் குழப்பம்தான்.

இந்த நிலையில், எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த, சில அதி மேதாவிகள், “இந்த S.I.R. பணியை நடைமுறைப்படுத்துவது மாநில அரசின் பணியாளர்கள்தானே? பிறகு ஏன் தி.மு.க. எதிர்க்க வேண்டும்?” என்று புரிதலற்ற, உண்மைக்குப் புறம்பான விவரங்களை வைத்துப் பேசுகிறார்கள். ஒரு பணியாளரைத் தேர்தல் ஆணையம் தன்னுடைய பணிக்காக எடுத்த நொடியில் இருந்தே, அவர் தேர்தல் ஆணையத்திற்குக் கட்டுப்பட்டுத்தான் செயல்படுவாரே ஒழிய, மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருக்க மாட்டார்.

மக்களை திசைதிருப்பினால் போதும் என்று தவறான தகவலைப் பரப்பக் கூடாது. ஏதாவது பொய் சொல்லி, S.I.R.-ஐ எப்படியாவது நடத்திடலாமா? ஏழை எளிய மக்களின் வாக்குரிமையை நீக்கிவிடலாமா? என்று எதிர்க்கட்சிகள் நினைப்பது வேதனைக்குரியது.

S.I.R. தொடங்கிய நாளில் இருந்து, களத்தில் இருக்கும் நம்முடைய கழகத்தினரும் நிறைய பிரச்சினைகளை நம்முடைய கவனத்திற்குக் கொண்டு வந்துகொண்டு இருக்கிறார்கள். B.L.O.-க்கள் வருவதில்லை. அவ்வாறு வந்தாலும், போதிய அளவில் கணக்கீட்டுப் படிவங்களைக் கொண்டு வருவதில்லை. ஒரு நாளைக்கு 30 படிவங்களுக்கு மேல் தருவதில்லை..

இந்த லட்சணத்தில் ஒரு தொகுதியின் ERO மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட கணக்கீட்டுப் படிவங்களை, இத்தனை குறுகிய கால அவகாசத்தில் எவ்வாறு கொடுத்து வாங்குவார்? வாங்கினால் வேலை முடிந்ததா? அதுவும் இல்லை. அதைக் கணினிமயமாக்கி, வரும் டிசம்பர் 7-ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட வேண்டும்! போகிற போக்கைப் பார்த்தால், எவ்வாறு இதையெல்லாம் செய்து முடிக்கப்போகிறார்கள்? என்று தோன்றுகிறது.

திராவிட முன்னேற்றக் கழகமும் கூட்டணிக் கட்சிகளும் தொடர்ந்து சொல்லிக் கொண்டு வருவது போல, அதிக அளவிலான வாக்காளர்கள் நீக்கப்படுவார்கள் என்ற அச்சம் இதன் மூலம் உறுதியாகிறது. BLO-க்கள் தங்களின் பணியைச் சரிவர செய்யவில்லை என்றால், இந்த S.I.R. பணியே மொத்தமாக பாதிப்பைச் சந்திக்கும்.

தி.மு.க. BLA2 தயாராக இருந்தாலும் கூட, பல இடங்களில் BLO-க்கள் வராமல் இருக்கிறார்கள். இதையெல்லாம் மீறித்தான் நம்முடைய செயல்வீரர்கள் விழிப்பாகச் செயல்பட்டு வருகிறார்கள். “உங்களின் வாக்கு நீக்கப்படுமா?” என்று கேட்டால், அவ்வாறு ஒரு அபாயம் நிச்சயம் இருக்கிறது, இல்லை என்று சொல்லிவிட முடியாது. அதைத் தடுக்க வேண்டும் என்றால், உங்கள் பகுதிக்குரிய BLO, யார்? என்று கேட்டு, அவரிடம் இருந்து கணக்கீட்டுப் படிவத்தை வாங்கி, சரியாக நிரப்பி, திரும்பச் சமர்ப்பிக்க வேண்டும்.

வாக்குரிமைதான் ஜனநாயகத்தின் மறுக்க முடியாத அடிப்படையான உரிமை. தற்போதைய நிலையிலான S.I.R. ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமைக்கும் ஏற்பட்டிருக்கும் பாதிப்பு. இதை எதிர்கொள்ளத் தி.மு.க. சார்பில் உதவி மையம் அமைத்திருக்கிறோம். இது தி.மு.க.-வினருக்கு மட்டும் அமைத்திருக்கும் உதவி மையம் இல்லை; அனைவருக்குமானது.

அதனால், கழக நிர்வாகிகள் மட்டுமல்லாமல், S.I.R.-ஆல் பாதிக்கப்படும் அனைத்துப் பொதுமக்களும் நாங்கள் அறிவித்திருக்கும் 08065420020 என்ற உதவி எண்ணைத் தொடர்பு கொண்டு உங்கள் சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளலாம். உங்களுக்குத் தேவையான வழிகாட்டுதல்களை, பெறலாம். தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமையைக் காக்க தி.மு.க. உங்கள் தோழனாக துணைநிற்கத் தயாராக இருக்கிறது” என கூறியிருந்தார்.

Read more: கர்ப்பிணி பெண்கள் சிக்கன் மட்டன் சாப்பிடலாமா..? தவிர்க்க வேண்டிய 5 முக்கிய விஷயங்கள்..! நிபுணர்கள் அட்வைஸ்..

English Summary

S.I.R. work is not going well.. People are in danger of losing their voting rights..! – Chief Minister Stalin’s accusation..

Next Post

ரூ.70,000 சம்பளம்.. முன்னணி விமான நிறுவனங்களில் பணியாற்ற சூப்பர் வாய்ப்பு..!! உடனே விண்ணப்பிங்க..

Sun Nov 9 , 2025
Salary of Rs.70,000.. Super opportunity to work in leading airlines..!! Apply now..
jobs at airport

You May Like