தெலுங்கானாவின் சங்காரெட்டியில் உள்ள சிகாச்சி குளோரோ கெமிக்கல் பிரைவேட் லிமிடெட் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 37 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 35 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 10 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெடி விபத்து நடந்த தொழிற்சாலைக்குள் 61 பேர் சிக்கியிருந்துள்ளனர். 11 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் உடனடியாக வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனையடுத்து மாநில பேரிடர் மீட்பு படையினர் உடனடியாக களத்தில் இறங்கி காயமடைந்தவர்களை மீட்டு பத்திரமாக மருத்துவமனையில் அனுமதித்திருக்கின்றனர். காயமடைந்தவர்களில் பலர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த சம்பவம் தெலுங்கானாவில் இதுவரை நடந்துள்ள மிகப்பெரிய தொழில்துறை விபத்தாக இருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விபத்து நடைபெற்றதும், தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF), ஹைட்ரா மீட்பு குழு, மற்றும் தெலுங்கானா தீயணைப்பு மற்றும் மீட்பு பிரிவினர் இணைந்து இரவு முழுவதும் மீட்புப் பணிகளை மேற்கொண்டனர்.
உயிரிழந்தவர்களின் உடல்கள் பட்டாஞ்சேருவில் உள்ள அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டு, பின்னர் அவர்களின் சொந்த இடங்களுக்கு அரசு ஆம்புலன்ஸ்களின் மூலம் அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தொழிற்சாலைகளில் அவ்வப்போது பாதுகாப்பு தணிக்கை மேற்கொள்வது இதுபோன்ற விபத்துகளைத் தடுக்க உதவும் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
Read more: மக்களே.. இன்று முதல் Swiggy, Zomato உணவு டெலிவரி நிறுத்தம்..? – ஹோட்டல் சங்கம் அதிரடி முடிவு