நாடு முழுவதும் பொதுவாக ஏப்ரல்–மே மாதங்களில் பள்ளிகளுக்கு ஆண்டு தேர்வுகள் முடிந்த பிறகு கோடை விடுமுறைகள் வழங்கப்படும். ஆனால் தற்போது, கல்வி கொள்கையில் அதிரடி மாற்றங்களை நோக்கி கேரள அரசு நகர்ந்துள்ளது. ஏப்ரல்-மே விடுமுறையை ஜூன்–ஜூலை மாதங்களுக்கு மாற்றும் திட்டம், புதிய சர்ச்சைகளுக்கும், பொதுமக்கள் விவாதத்திற்கும் இடமளித்துள்ளது.
இதுதொடர்பாக கேரள கல்வித்துறை அமைச்சர் சிவன் குட்டி வெளியிட்டுள்ள பதிவில், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கடுமையான வெப்பத்தால் மாணவர்களுக்கு உளவியல் மற்றும் உடல் சிரமங்கள் ஏற்படுவது உண்மைதான். ஆனால் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் தொடர் கனமழை காரணமாக பள்ளி இயங்க முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால் பாடங்களை ஆசிரியர்களால் சரியாக நடத்த முடியவில்லை.
ஏப்ரல்-மே மாத விடுமுறைக்கு பதிலாக ஜூன்-ஜூலையில் விடுமுறை வழங்குவது சாத்தியமான மாற்றமாக இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார். இது வெறும் பரிந்துரை மட்டுமே எனக் குறிப்பிட்ட அமைச்சர் மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள் உள்ளிட்ட பொதுமக்களிடமிருந்து கருத்துகள் மற்றும் ஆலோசனைகள் பெறப்பட்ட பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.
அமைச்சரின் இந்த பதிவுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். காங்கிரஸ் ஆசிரியர் சங்கம் கூறுகையில், கல்வித்துறையில் உள்ள உண்மையான பிரச்சினைகளில் இருந்து கவனத்தைத் திசை திருப்பவே அமைச்சர் இதுபோன்ற பரிந்துரைகளை முன்வைப்பதாக குற்றம்சாட்டியுள்ளனர். கேரளாவின் நிலவியல் மற்றும் காலநிலை மாற்றத்தைக் கருத்தில் கொண்டு கல்விக் காலண்டரை மாற்ற அனுமதிக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளனர்.
Read more: இனி திருப்பதியில் ரீல்ஸ் எடுக்க தடை. மீறினால் சிறை தண்டனை.. TTD எச்சரிக்கை!