திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த வளையாம்பட்டு பகுதியில் அமைந்துள்ள தனியார் பள்ளி மைதானத்தில், பள்ளிகளுக்கு இடையேயான கபடிப் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்றன. இதில் சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ அணிகள் ஆர்வத்துடன் பங்கேற்று விளையாடி வந்தன. அப்போது, களத்தில் தனது அணிக்காக தீவிரமாக விளையாடிக் கொண்டிருந்த அரசுப் பள்ளி மாணவர் முகேஷ் (17), எதிர்பாராத விதமாக மைதானத்திலேயே திடீரென நிலைகுலைந்து சுருண்டு விழுந்து மயக்கமடைந்தார்.
இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த சக மாணவர்களும், அங்கு பணியில் இருந்த ஆசிரியர்களும் உடனடியாக அவரை மீட்டு, சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மாணவனைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். மைதானத்தில் தீவிரமாக விளையாடிக்கொண்டிருந்த போதே மாணவனின் மூச்சு நின்றுபோனது முதற்கட்டப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
சற்று நேரத்திற்கு முன்பு வரை தங்களோடு துடிப்பாகக் கபடி விளையாடிய சக நண்பன், கண் இமைக்கும் நேரத்தில் சடலமாகக் கிடப்பதைப் பார்த்து மருத்துவமனை வளாகத்தில் சக மாணவர்களும் பெற்றோர்களும் கதறி அழுத காட்சி காண்போரின் கண்களைக் குளமாக்கியது. இச்சம்பவம் தொடர்பாகத் தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், மாணவரின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். மைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்த மாணவரின் திடீர் மரணத்திற்கு மாரடைப்பா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விளையாட்டு மைதானத்தில் நிகழ்ந்த இந்தத் துயரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Read More : 2026-ல் கோரத் தாண்டவமாடும் இயற்கை..!! பூமியின் அழிவு ஆரம்பமா? நாம் கற்க வேண்டிய பாடம்..!!



