ஆப்கானிஸ்தானில் திங்கட்கிழமை அதிகாலையில் 6.3 ரிக்டர் அளவிலான வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் (NCS) தெரிவித்துள்ளது. இது குறுகிய இடைவெளியில் அந்தப் பகுதியில் ஏற்பட்ட இரண்டாவது பெரிய அதிர்வாகும்.
இந்த நிலநடுக்கம் 23 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாகவும், அதன் மையம் மசார்-இ-ஷெரீப் மற்றும் குல்ம் நகரங்களுக்கு அருகே இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. வடக்கு பால்க் மாகாணத்தின் தலைநகரான மசார்-இ-ஷெரீப், ஆப்கானிஸ்தானின் மிக அதிக மக்கள் தொகை கொண்ட நகரங்களில் ஒன்றாகும்.
சிஎன்என் செய்தி நிறுவனத்தின் தகவலின்படி, இந்த நிலநடுக்கம் நூற்றுக்கணக்கான உயிரிழப்புகளுக்கு வழிவகுக்கும் என அமெரிக்க புவியியல் ஆய்வு நிறுவனம் (USGS) எச்சரித்துள்ளது. USGS PAGER அமைப்பு “ஆரஞ்சு எச்சரிக்கை” அறிவித்து, இது பரவலான மனித மற்றும் பொருளாதார இழப்புகளுக்குக் காரணமாக இருக்கலாம் என கூறியுள்ளது.
அதே நேரத்தில், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் மற்றும் துர்க்மெனிஸ்தான் ஆகிய நாடுகளின் சில பகுதிகளிலும் இந்த அதிர்வுகள் உணரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. முன்னதாக, ஆப்கானிஸ்தானில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் 3.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கமும் ஏற்பட்டது. இது பின்னர் ஏற்பட்ட பெரிய அதிர்வுக்கு முன்னோட்டமாக இருந்திருக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.



