ஈரான் மற்றும் அமெரிக்கா – இஸ்ரேல் இடையே போர் தொடங்கிய பிறகு, வெளிநாடுகளில் செயல்படும் “ஸ்லீப்பர் செல்” குழுக்களை செயல்படுத்த ஈரான் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.. இதற்காக ஒரு “செயல்பாட்டு சிக்னல்” (operational trigger) அனுப்பியிருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்கா இடைமறித்த ஒரு குறியாக்கப்பட்ட (encrypted) செய்தியை அடிப்படையாகக் கொண்டு இந்த தகவல் வெளியானதாக கூறப்படுகிறது.
அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானில் ஒரு வாரத்திற்கும் மேலாக கடுமையான வான்வழி தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றன. அதே நேரத்தில், ஈரானும் இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளுக்கு எதிராக மேலும் தாக்குதல்களை நடத்தி வருகிறது. மேலும் ஹிஸ்புல்லா அமைப்பு எதிராக இஸ்ரேல் லெபனானில் தாக்குதல்கள் நடத்தி வருகிறது. அதே சமயம், அந்த அமைப்பும் இஸ்ரேலுக்கு எதிராக ராக்கெட் தாக்குதல்களை தொடர்ந்து நடத்தி வருகிறது.
ஈரான் “ஸ்லீப்பர் செல்” குழுக்களை செயல்படுத்தியதா?
அமெரிக்கா இடைமறித்த குறியாக்கப்பட்ட செய்தியின் அடிப்படையில், வெளிநாடுகளில் செயல்படும் “ஸ்லீப்பர் செல்” குழுக்களை செயல்படுத்தும் நோக்கில் ஈரான் ஒரு “செயல்பாட்டு சிக்னல்” அனுப்பியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.. மேலும் இந்த குறியீட்டு சிக்னல், ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனி பிப்ரவரி 28 அன்று உயிரிழந்த பிறகு அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது.
அந்தச் செய்தியில் “ரகசிய நடவடிக்கைகளில் ஈடுபடும் முகவர்கள் அல்லது ஸ்லீப்பர் செல் உறுப்பினர்களுக்கு” வழிமுறைகள் இருந்திருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த எச்சரிக்கை அறிக்கையில், இந்தச் செய்தி “அந்த நாட்டுக்கு வெளியே செயல்பட்டு வரும் ஸ்லீப்பர் செல் உறுப்பினர்களை செயல்படுத்த அல்லது அவர்களுக்கு வழிமுறைகளை வழங்கும் நோக்கத்துடன் இருக்கலாம்” என்று கூறப்பட்டுள்ளது.
அமெரிக்கா இடைமறித்த இந்த ஒலிபரப்பு முழுவதும் குறியாக்கம் செய்யப்பட்டதாகும். அதனால், தேவையான குறியாக்க விசை (encryption key) வைத்திருக்கும் “ரகசிய பெறுநர்களுக்காக” மட்டுமே இந்த செய்தி அனுப்பப்பட்டதாகத் தோன்றுகிறது. இத்தகைய செய்திகள் இணையம் அல்லது மொபைல் வலையமைப்புகளை பயன்படுத்தாமல், “ரகசிய நடவடிக்கை மேற்கொள்ளும் முகவர்கள் அல்லது ஸ்லீப்பர் செல் உறுப்பினர்களுக்கு” உத்தரவுகளை அனுப்புவதற்காக பயன்படுத்தப்படுகின்றன.
அமெரிக்கா வெளியிட்ட எச்சரிக்கையின் படி, உளவுத்துறை அமைப்புகள் ஈரானுக்கு வெளியே உள்ள பல நாடுகளுக்கு இந்தச் செய்தியை மீண்டும் மீண்டும் அனுப்பி வரும் ஒரு ஒலிபரப்பு நிலையத்தை கண்டறிந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது..
“இந்த ஒலிபரப்புகளின் சரியான உள்ளடக்கம் தற்போது உறுதியாக தெரியவில்லை. ஆனால் திடீரென ஒரு புதிய ஒலிபரப்பு நிலையம் உருவாகி, அது பல நாடுகளுக்கு ஒலிபரப்புகளை அனுப்புவது போன்ற தன்மை இருப்பதால், அதிக கவனத்துடன் நிலைமையை கண்காணிக்க வேண்டும்,” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், இந்த எச்சரிக்கை குறிப்பில் “ஒரு குறிப்பிட்ட இடத்துடன் தொடர்புடைய உடனடி பாதுகாப்பு அச்சுறுத்தல் இல்லை” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், வழக்கத்திற்கு மாறான ரேடியோ அதிர்வெண் (radio-frequency) சிக்னல்களை கண்காணிப்பதை சட்ட அமலாக்க அமைப்புகள் அதிகரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் பாதுகாப்பு அதிகரிப்பு
ஈரானுடன் நடைபெறும் போர் காரணமாக, அமெரிக்காவுக்குள் பழிவாங்கும் தாக்குதல்கள் நடைபெறக்கூடும் என்ற அச்சம் உளவுத்துறை நிபுணர்களிடையே எழுந்துள்ளது.
“அமெரிக்காவில் ஹிஸ்புல்லா அல்லது ஹமாஸ் குழுவின் உறுப்பினர்கள் வன்முறை நடவடிக்கை எடுக்கக்கூடிய நேரம் எப்போதாவது வந்தால், அது இப்போது தான்,” என்று FBI முன்னாள் உதவி இயக்குநர் கிறிஸ் சியூக்கர் தெரிவித்தார். போர் தொடங்கிய சில நேரங்களுக்குப் பிறகு அவர் இந்த கருத்தை தெரிவித்தார்..
பிப்ரவரி 28 அன்று அமெரிக்கா ஈரானில் தாக்குதல்கள் நடத்திய பிறகு, FBI இயக்குநர் காஷ் படேல் எக்ஸ் சமூக வலைதள பதிவில், “தீவிரவாத எதிர்ப்பு மற்றும் உளவுத்துறை குழுக்கள் உயர் எச்சரிக்கை நிலையில் இருக்கவும், தேவையான அனைத்து பாதுகாப்பு வளங்களையும் இயக்கவும்” உத்தரவிட்டதாக கூறினார்.
அமெரிக்க நிலப்பரப்பில் ஈரான் தாக்குதல் நடத்தும் வாய்ப்பு குறித்து அதிபர் டொனால்ட் டிரம்பிடம் கேள்வி எழுப்பப்பட்டது.. அதற்கு பதிலளித்த டிரம்ப் ” அது பற்றி நாங்கள் எப்போதும் சிந்திக்கிறோம். அதற்கான திட்டங்களையும் தயாராக வைத்திருக்கிறோம். சில விஷயங்கள் நடக்கலாம் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். போர் நடந்தால் சிலர் உயிரிழப்பது தவிர்க்க முடியாததே,” என்று கூறினார்.
மேலும், அமெரிக்காவின் முக்கிய நகரங்களான லாஸ் ஏஞ்சல்ஸ், மியாமி, நியூ யார்க் ஆகிய நகரங்களின் தலைவர்கள், மத வழிபாட்டு தலங்கள், கலாச்சார மையங்கள் மற்றும் பள்ளிகள் போன்ற முக்கிய இடங்களில் கூடுதல் பாதுகாப்பு மற்றும் காவல் கண்காணிப்பை அதிகரித்துள்ளதாக அறிவித்துள்ளனர்.
Read More : “அமெரிக்கா இல்ல.. போரின் முடிவை ஈரான் தான் முடிவு செய்யும்..” டிரம்பின் கருத்துக்கு பதிலடி..



