பாலியல் புகார் வழக்கை ரத்து செய்ய கோரும் சீமானின் மேல்முறையீடு மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது, பிரபல நடிகை விஜயலட்சுமி 2011ஆம் ஆண்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில் திருமணம் செய்வதாக கூறி உடலுறவு வைத்துக் கொண்டு, 7 முறை கர்ப்பத்தை கலைத்தார் கூறியிருந்தார். இந்த புகாரின் அடிப்படையில், சீமான் மீது இந்திய தண்டனைச் சட்டம் 376வது பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த சூழலில் கடந்த 2023 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நடிகை விஜயலட்சுமி தொடர்ந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், 12 வாரங்களுக்குள் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்டனர்.
பின்னர், இந்த உத்தரவை எதிர்த்து சீமான் உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்தார். அதில், இரு தரப்பும் அமர்ந்து பேசி தீர்வு காண அறிவுறுத்திய உச்சநீதிமன்றம், வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தது. ஆனால், நடிகை தரப்பு சமரசத்திற்கு தயாரில்லை என்று தெரிவித்தது. இதையடுத்து, நீதிமன்றம் இடைக்காலத் தடையை மேலும் 4 வாரங்கள் நீட்டித்தது.
பாலியல் புகார் வழக்கை ரத்து செய்யக் கோரும் சீமானின் மேல்முறையீடு மனுவை விரைந்து விசாரிக்க வேண்டும் என்று நடிகை விஜயலட்சுமி கோரிக்கை விடுத்ததை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கை செப்டம்பர் 12ம் தேதி பட்டியலிட்டு விசாரிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர். அதன்படி இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
திருமணம் செய்யும் எண்ணம் இல்லாமல் போலி நம்பிக்கை கொடுத்து என்னை ஏமாற்றிவிட்டு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார் என விஜயலட்சுமி தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் சீமான் மன்னிப்பு கேட்க உத்தரவிட்டனர். மன்னிப்பு கோரும் மனுவை தாக்கல் செய்யவில்லை என்றால் சீமான் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரிய மனுவை ஏற்க மாட்டோம் எனவும் தெரிவித்தனர்.
Read more: FD-யை விட அதிக வட்டி கிடைக்கும் போஸ்ட் ஆபீஸ் திட்டங்கள்.. எந்த ரிஸ்கும் கிடையாது..!!