தமிழக அரசியல் களத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் எடுத்து வரும் அதிரடி அரசியல் நகர்வுகள், திராவிடக் கட்சிகளின் கோட்டையில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன. “கூட்டணியில் இணைபவர்களுக்கு ஆட்சியில் பங்கு” என விக்கிரவாண்டி மாநாட்டில் விஜய் வீசிய அதிகாரப் பகிர்வு அஸ்திரம், தமிழகத்தின் பாரம்பரிய அரசியல் முறையையே புரட்டிப் போட்டுள்ளது.
தற்போது தவெக-வை நோக்கி திரும்பியுள்ள முக்கிய கவனிப்பு என்னவென்றால், அதிமுகவில் இருந்து விலகி அக்கட்சியில் இணைந்த மூத்த தலைவர் செங்கோட்டையனின் செயல்பாடுகள் தான். அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் டி.டி.வி.தினகரன் என பல பிரிவுகளாக சிதறிக்கிடக்கும் சூழலில், கட்சியை ஒன்றிணைக்க வேண்டும் என குரல் கொடுத்ததற்காகச் செங்கோட்டையன் நீக்கப்பட்டார்.
தற்போது விஜய்யின் கரத்தை வலுப்படுத்தியுள்ள அவர், எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் இருக்கும் அதிமுக நிர்வாகிகளை தவெக-வுக்கு இழுக்கும் பணியை தீவிரப்படுத்தியுள்ளார். சமீபத்தில் ஒரு பொது நிகழ்வில் பேசிய செங்கோட்டையன், தமிழக அரசியலில் ஒரு பெரிய கூட்டணி குண்டு வெடிக்கப்போவதை உறுதிப்படுத்தியுள்ளார். யாரெல்லாம் தவெக கூட்டணிக்கு வருவார்கள் என்பதைப் பொங்கல் வரை பொறுத்திருந்து பாருங்கள் என கூறியுள்ள அவர், ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் விஜய்யின் தலைமையிலான கூட்டணியில் இணைவது ஏறத்தாழ உறுதி என்பதையும் சூசகமாக தெரிவித்துள்ளார்.
ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோருடன் செங்கோட்டையனுக்கு இருக்கும் பழைய நெருக்கம், இந்த மெகா கூட்டணியை சாத்தியப்படுத்தும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். இந்த தகவலால் அதிமுக வட்டாரத்தில் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. ஒருபுறம் எடப்பாடி பழனிசாமி தனது தலைமையை தக்கவைக்கப் போராடி வரும் நிலையில், மறுபுறம் செல்வாக்குமிக்க மாவட்ட நிர்வாகிகள் பலரும் தவெக-வில் இணைய தயாராகி வருவது அதிமுக-வுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. வரும் பொங்கல் பண்டிகைக்குப் பிறகு, தமிழகத்தின் கூட்டணி வரைபடம் முற்றிலுமாக மாறும் என்பதால், அரசியல் களம் இப்போதே அனல் பறக்க தொடங்கிவிட்டது.
Read More : தடாலடி அறிவிப்பு..!! ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.5,000 பொங்கல் பரிசுத்தொகை..!! அதிமுகவின் மெகா வாக்குறுதி..!!



