இந்தியாவின் மூன்று மாநிலங்களில், சிறுவர்கள் பாலியல் வன்கொடுமைக்குள்ளாகிய சம்பவங்கள் தொடர்பாக, ஆசிரியர்கள் மீது POCSO சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. சென்னையில் தொடங்கிய இந்த அதிர்ச்சி சம்பவங்கள் தற்போது ராமநாதபுரம், மும்பை வரை பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அசோக் நகரிலுள்ள பிரபல தனியார் பள்ளியின் 40 வயதான தமிழ் ஆசிரியர் சுதாகர், தனது 9ம் வகுப்பு மாணவனை கடந்த 2023ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாக புகார் எழுந்துள்ளது. மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த மாணவனுக்கு உடல்நலம் திடீரென பாதிக்கப்பட்டதால், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். அதன் பிறகே இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.
மாணவனிடம் பெற்றோர் விசாரித்ததிலேயே ஆசிரியரால் தொடர்ந்து பாலியல் தொந்தரவு தரப்பட்டதாக கூறியுள்ளார். மாணவனின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தபோதும் ஆரம்பத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பொதுமக்கள் பேரணியுடன் போராட்டத்தில் இறங்கியபின்னரே, ஆசிரியர் சுதாகர் கைது செய்யப்பட்டார்.
அதேபோல் கடந்த வாரம் ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் உள்ள தனியார் பள்ளியில், 10ம் வகுப்பு மாணவனை ஹாஸ்டல் வார்டன் கவியரசன் (23) பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கியதாக புகார் எழுந்துள்ளது. மாணவனின் தாயார் கதறியபடியே மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததுடன், மேலும் சில ஆசிரியர்களாலும் மாணவனுக்கு தொந்தரவு ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள ஒரு பிரபல பள்ளியைச் சேர்ந்த 40 வயதான பெண் ஆசிரியை, தனது 16 வயது மாணவனை பாலியல் ரீதியாக துன்புறுத்தல் கொடுத்தற்காக கைது செய்யப்பட்டார். அந்தப் பெண், மைனர் சிறுவனை மும்பையில் உள்ள பல்வேறு ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள் மற்றும் பிற இடங்களுக்கு அழைத்துச் சென்று, குடிக்க வைத்து, பதட்ட எதிர்ப்பு மாத்திரைகளையும் கொடுத்த பிறகு பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. அந்த ஆசிரியை ஒரு வருடத்திற்கும் மேலாக மாணவனை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்துள்ளார்.
பாதிக்கப்பட்ட மாணவரின் நடத்தையில் மாற்றத்தை குடும்பத்தினர் கவனிக்கத் தொடங்கிய பிறகு இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அப்போதுதான் அந்த மாணவர் தனது குடும்பத்தினரிடம் ஆசிரியையின் துஷ்பிரயோகம் பற்றி கூறினார். பெற்றோர் அளித்த புகாரின் பேரில் சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
சிறார்களின் நலன் காப்பதற்காகவே போக்சோ உள்ளிட்ட எண்ணற்ற சட்டங்களும் அமலில் இருக்கின்றன.. அனைத்துக்கும் மேலாக, பாலியல் வக்கிரங்களை அரங்கேற்றுபவர்களை தண்டிக்க நீதிமன்றங்களும் துணை நிற்கின்றன.. ஆனாலும்கூட, ஆண் குழந்தைகளும் நாளுக்கு நாள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாவது அதிர்ச்சியை தந்து வருகிறது… சிறுமிகளை போலவே, சிறுவர்களுக்கும் பாதுகாப்பின்மை நிலவுவது அதிர்ச்சியையும், வேதனையையும் தந்து கொண்டிருக்கிறது..
பெற்றோர்கள், மாணவர்கள், பள்ளிகள் என்ன செய்ய வேண்டும்?
* பெற்றோர் குழந்தைகளுடன் திறந்த உரையாடலை உருவாக்க வேண்டும்.
* மாணவர்கள் எந்தவிதமான தொந்தரவு ஏற்பட்டாலும் பயப்படாமல் தெரிவிக்கும் நம்பிக்கையை பெற்றோர்களிடம் பெற வேண்டும்.
* பள்ளி நிர்வாகங்கள் குற்றச்சாட்டுகளை மறைக்காமல் உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
* ஆசிரியர்கள் மீதான தகுதி சோதனை, மனநலம் மற்றும் ஒழுக்கப்பரிசோதனைகள் கட்டாயமாக்கப்பட வேண்டும்.
Read more: 31 பந்துகளில் 86 ரன்கள்.. யு-19 போட்டியில் வரலாற்று சாதனை படைத்த வைபவ் சூர்யவன்ஷி..!!