மகாராஷ்டிராவின் சதாரா மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் பணிபுரியும் பெண் மருத்துவர் நேற்றிரவு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண் தனது உள்ளங்கையில் தற்கொலை குறிப்பை எழுதி வைத்துள்ளார்.. அதில், 2 காவல்துறையினரின் பாலியல் வன்கொடுமை மற்றும் நீண்டகால மன துன்புறுத்தலுக்கு ஆளானதாகக் குற்றம் சாட்டினார்.
பீட் மாவட்டத்தைச் சேர்ந்த அந்தப் பெண், பால்தான் தாலுகாவில் உள்ள அரசு மருத்துவமனையில் பணியமர்த்தப்பட்டார். வியாழக்கிழமை நள்ளிரவில் பால்தானில் உள்ள ஒரு ஹோட்டல் அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் அவர் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன..
முதற்கட்ட விசாரணையில், மருத்துவர் இறப்பதற்கு முன்பு தனது உள்ளங்கையில் தற்கொலைக் குறிப்பை எழுதியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.. அந்தக் குறிப்பில், கடந்த 5 மாதங்களில் சப்-இன்ஸ்பெக்டர் கோபால் பதானே தன்னை 4 முறை பாலியல் வன்கொடுமை செய்து பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியதாக அப்பெண் குற்றம் சாட்டினார்.
அதே காலகட்டத்தில் மற்றொரு காவல்துறை அதிகாரியான பிரசாந்த் பங்கர் தன்னை தொடர்ச்சியான மன துன்புறுத்தலுக்கு ஆளாக்கியதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
தற்கொலை செய்து கொண்ட பெண் மருத்துவரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, வழக்கு பதிவு செய்யப்பட்டு உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. சதாரா காவல்துறை அதிகாரி ஒருவர் இதுகுறித்து பேசிய போது “நாங்கள் வழக்குப் பதிவு செய்துள்ளோம், உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவரின் கையில் உள்ள தற்கொலைக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்தும் நாங்கள் விசாரித்து வருகிறோம்,” என்று தெரிவித்தார்.
சதாரா மாவட்ட எஸ்பி துஷார் தோஷி இதுகுறித்து பேசிய போது “ சதாரா மாவட்ட காவல்துறை, காவல் துறை அதிகாரி கோபால் பதானே மற்றும் பங்கர் மீது பாலியல் வன்கொடுமை மற்றும் தற்கொலைக்குத் தூண்டுதல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது. குற்றம் சாட்டப்பட்ட காவல் துறை அதிகாரி உடனடியாக பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்..” என்று தெரிவித்தார்.
இதனிடையே, இறந்த பெண்ணின் சகோதரர், தவறான பிரேத பரிசோதனை அறிக்கைகளை வழங்க வேண்டும் காவல்துறை மற்றும் அரசியல் அழுத்தம் இருந்ததாகக் கூறினார். மேலும் இதுகுறித்து புகாரளித்துள்ளதாகவும், தனது சகோதரிக்கு நீதி கிடைக்க வேண்டும்,” என்று அவர் மேலும் கூறினார்.
இதனிடையே, சம்பவத்தை கவனத்தில் கொண்டு, குற்றம் சாட்டப்பட்ட அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக மகாராஷ்டிரா மகளிர் ஆணையத் தலைவர் ரூபாலி சக்கன்கர் தெரிவித்தார். மேலும் “இந்த விஷயத்தை நாங்கள் கவனத்தில் கொண்டு, குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க சதாரா காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளோம். குற்றம் சாட்டப்பட்டவர்களை பிடிக்க குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் தப்பவிடப்பட மாட்டார்கள்,” என்று கூறினார்.
இது தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட காவல்துறை அதிகாரிகளைக் கண்டறியவும் குழுக்கள் நியமிக்கப்பட்டு, காவல்துறை விசாரணை நடந்து வருகிறது.



