ஆக்ராவில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் வழக்கறிஞரால் இளம் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வழக்கறிஞர் ஒருவர் தனக்கு உதவுவதாகக் கூறி தன்னை ஏமாற்றி, பல முறை பாலியல் பலாத்காரம் செய்ததாக அந்தப் பெண் குற்றம் சாட்டியுள்ளார்.
ஆக்ராவின் ஷாகஞ்ச் காவல் நிலையப் பகுதியில் வசிக்கும் ஒரு பெண் தனது சகோதரனுடன் ஏற்பட்ட தகறாரில் 2019 ஆம் ஆண்டு, ஆக்ராவின் சிவில் நீதிமன்றத்தை அணுகியுள்ளார். அங்கு காங்கிரஸ் தலைவரும் வழக்கறிஞருமான ஜலாவுதீனை சந்தித்தார். வழக்கறிஞர் ஜலாவுதீன் தனக்கு உதவி செய்வதாக உறுதியளித்து, தனது வலையில் சிக்க வைக்கத் தொடங்கியதாக அந்தப் பெண் குற்றம் சாட்டினார்.
உதவி கிடைக்கும் என்ற நம்பிக்கையில், அந்தப் பெண் தனது முழு கதையையும் வழக்கறிஞரிடம் கூறியுள்ளார். பின்னர் வழக்கறிஞர் அந்தப் பெண்ணின் வீட்டிற்கு அடிக்கடி செல்லத் தொடங்கினார். ஒரு நாள் அந்த பெண்ணை காங்கிரஸ் கட்சி அலுவலகத்திற்கு அழைத்துச் சென்ற வழக்கறிஞர் அங்கு பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்த சம்பவம் குறித்து யாரிடமாவது சொன்னால் சமூகத்தில் தன்னை பற்றி அவதூறு பரப்புவதாக மிரட்டியதாக அந்தப் பெண் கூறினார்.
மேலும் அந்த பெண் கூறுகையில், வழக்கறிஞர் தன்னை மிரட்டி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். எங்கள் வீட்டில் அனுமதி இன்றி வலுக்கட்டாயமாக நுழைந்தார். வீட்டில் தொழுகை நடத்தத் தொடங்கியதாகவும், தன்னையும் தொழுகை நடத்தவும், நோன்பு நோற்கவும் வற்புறுத்தியதாகவும் பாதிக்கப்பட்ட பெண் கூறினார். வீட்டில் தொழுகை நடத்துவதை எதிர்த்தபோது கத்தியால் தாக்க முயன்றதாகவும், அடித்து துன்புறுத்தியதாகவும் அந்த பெண் கூறினார்.
தற்போது பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகார் அளித்துள்ளார். அந்தப் பெண் வழக்கறிஞர் மீது பாலியல் பலாத்காரம் உட்பட கடுமையான குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளார். அந்தப் பெண்ணின் புகாரின் பேரில் ஷாகஞ்ச் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.