கேரள மண்ணில் பிறந்து, சமீப காலமாக பான் இந்திய அளவில் பிரபலமடைந்தவர் பாடகர் வேடன். எளிய நடையும், மனதைக் தொட்ட பாடல்களும் அவருக்கு ஏராளமான ரசிகர்களை உருவாக்கிய நிலையில், தற்போது அவர் மீது தொடர் சர்ச்சைகள் எழுந்துள்ளன.
பெண் மருத்துவர் ஒருவர், வேடன் மீது பாலியல் வன்கொடுமை மற்றும் மோசடி புகார் அளித்துள்ளார். புகாரின்படி, சமூகவலைதளத்தில் ரசிகையாக அறிமுகமான பின்னர், இருவரும் நெருக்கமாக பழகி வந்துள்ளனர். 2021 முதல் 2023 வரையிலான காலப்பகுதியில் பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று திருமணம் செய்வதாக வாக்குறுதி அளித்து பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்த பெண் கூறியுள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில் கேரள மாநிலம் திக்காக்கரா காவல்நிலையத்தில் FIR பதிவு செய்யப்பட்டு, போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இவர் மீதான குற்றம் உறுதியாகும் பட்சத்தில்,எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது. வேடன் வழக்கில் சிக்குவது இது முதல் முறை அல்ல.
கடந்த ஏப்ரல் மாதத்தில், கனியம்புழா பகுதியில் நண்பர்களுடன் தங்கி இருந்த வேடன், போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டார். அந்த வீட்டில் நடைபெற்ற தேடுதல் வேட்டையில் 6 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், வேடன் உட்பட 9 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பாலியல் வன்கொடுமை புகார் அளிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.