கர்நாடக மாநிலம் உத்தர கன்னடா மாவட்டத்தை சேர்ந்த சித்தாபுரா பகுதியில், குடும்பப் பிரச்சனையை தீர்க்க வந்த ஜோதிடருடன் ஏற்பட்ட கள்ளக்காதல் விவகாரம், இறுதியில் ஒரு உயிரைப் பறித்ததோடு ஒரு குடும்பத்தையே சிதைத்துள்ளது.
பெங்களூருவில் பணியாற்றி வரும் மகேஷ் நாயக் என்பவரின் மனைவி சுஜித்ரா, தனது குடும்பப் பிரச்சனைகளுக்கு பரிகாரம் தேடி காமல்கார் என்ற பிரபல ஜோதிடரை அணுகியுள்ளார். “48 நாட்கள் தொடர்ந்து பூஜை செய்ய வேண்டும்” என்ற ஜோதிடரின் வார்த்தையை நம்பி தினமும் அலுவலகம் சென்று வந்த சுஜித்ராவுக்கு, நாளடைவில் அவருடன் திருமணத்திற்கு மீறிய உறவு ஏற்பட்டுள்ளது. மகேஷ் நாயக் ஊரில் இல்லாத நேரங்களில், ஜோதிடர் அந்த வீட்டிலேயே தங்கி வந்துள்ளார்.
தனது தாயும் ஜோதிடரும் நெருக்கமாக இருந்ததை கண்ட மகள்கள் அதிர்ச்சியடைந்து, பெங்களூருவில் இருந்த தந்தையிடம் அழுது புலம்பியுள்ளனர். இதையடுத்து, பாதுகாப்பு கருதி மகள்களை தனது சகோதரர் வசந்த் நாயக் வீட்டிற்கு மகேஷ் அனுப்பி வைத்தார். ஆனால், ரகசியம் கசிந்த ஆத்திரத்தில் இருந்த சுஜித்ரா, தனது காதலன் மற்றும் அடியாட்களுடன் வசந்த் நாயக் வீட்டிற்கு சென்று மகள்களை தூக்க முயன்றுள்ளார்.
அப்போது ஏற்பட்ட மோதலில், ஜோதிடரும் அவரது ஆட்களும் தந்தை மகேஷ் நாயக் மற்றும் அவரது சகோதரர் வசந்த் நாயக்கை கத்தியால் சரமாரியாக குத்தினர். இதில், படுகாயமடைந்த இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த போதிலும், சிகிச்சை பலனின்றி வசந்த் நாயக் பரிதாபமாக உயிரிழந்தார். தந்தை மகேஷ் நாயக் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், தலைமறைவாக இருந்த ஜோதிடர் காமல்கார், கள்ளக்காதலி சுஜித்ரா உட்பட 7 பேரை அதிரடியாக கைது செய்துள்ளனர்.



