கர்நாடக மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் (KMCRI) சமீபத்தில் ஒரு அரிய மருத்துவ நிலையில், ஒரு ஆண் குழந்தை தனது உடலுக்குள் மற்றொரு கருவுடன் பிறந்தது.
கர்நாடக மாநிலம், தார்வாட் மாவட்டம், குந்த்கோல் தாலுகாவை சேர்ந்த ஒரு பெண், இரண்டாவது முறையாக கர்ப்பம் ஆனார். பிரசவத்துக்காக, ஹூப்பள்ளியின் அரசு சார்ந்த, ‘கிம்ஸ்’ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். செப்டம்பர் 23ல் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தையின் உடலில் சில மாற்றங்கள் தென்பட்டதால், ‘அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன்’ செய்யப்பட்டது. அப்போது குழந்தையின் வயிற்றில், முதுகெலும்பு உள்ளே ஒரு கரு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இதை தெளிவாக தெரிந்து கொள்ள, எம்.ஆர்.ஐ., ஸ்கேன் செய்ய மருத்துவர்கள் முடிவு செய்துள்ளனர்.
கருப்பையில் உடல்கள் இணைக்கப்பட்ட நிலையில் பிறக்கும் சியாமிஸ் இரட்டையர்கள் அல்லது ஒட்டிப் பிறந்த இரட்டையர்களுடன் ஒப்பிடும்போது, கருவில் உள்ள கரு மிகவும் அரிதானது. ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள் 50,000 முதல் 200,000 பிறப்புகளில் ஒன்றுக்கு ஒன்று பிறக்கும் வாய்ப்பு இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
கிம்ஸ் மருத்துவமனை டாக்டர் ஈஸ்வர கசபி கூறியதாவது, குழந்தைக்குள், ஒரு குழந்தை இருப்பது உலகிலேயே மிக அபூர்வமான விஷயம். இதை மருத்துவ மொழியில், ‘கருவுக்குள் கரு’ என அழைப்பர். இது, பச்சிளம் குழந்தையின் உடலுக்குள் ஏற்பட்ட இயல்பற்ற வளர்ச்சி. உலகம் முழுதும் சில குழந்தைகளுக்கு மட்டும் இப்படி நடக்கும். குழந்தை பிறப்பதற்கு முன்பே, இந்த விஷயத்தை கண்டுபிடிக்கவில்லை. இத்தகைய குழந்தைக்கும், ஒட்டி பிறந்த இரட்டை குழந்தைகளுக்கும் வித்தியாசம் உள்ளது. எம்.ஆர்.ஐ., ஸ்கேன் செய்த பின், அடுத்தகட்ட சிகிச்சை அளிக்கப்படும் என்றும் குழந்தையின் தாய் ஆரோக்கியமாக இருக்கிறார் என்று கூறினார்.