டிஜிட்டல் மயமாகிவிட்ட இன்றைய உலகில், மனிதர்களின் அன்றாட தேவைகளாக மாறிவிட்ட ஸ்மார்ட்போன்கள் மற்றும் லேப்டாப்களின் விலை 2026-ஆம் ஆண்டில் அதிரடியாக உயரக்கூடும் என்ற தகவல் தொழில்நுட்ப உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பேருந்து டிக்கெட் முன்பதிவு முதல் ரேஷன் கடை பொருட்கள் வரை அனைத்தும் டிஜிட்டல் மயமாகிவிட்ட சூழலில், இந்த விலை உயர்வு சாமானிய மக்களின் பட்ஜெட்டை நேரடியாக பாதிக்கும் என அஞ்சப்படுகிறது.
சர்வதேச சந்தை ஆய்வு நிறுவனமான ஐடிசி (IDC), 2026-ஆம் ஆண்டில் கணினி மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையில் குறிப்பிடத்தக்க விலை மாற்றங்கள் இருக்கும் என ஏற்கனவே கணித்திருந்தது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக, உலகின் முன்னணி மின்னணு நிறுவனமான சாம்சங் (Samsung), தனது தயாரிப்புகளின் விலையை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. குறிப்பாக ஸ்மார்ட்போன்கள், லேப்டாப்கள் மற்றும் டேப்லெட்டுகளின் தற்போதைய விலை வரும் நாட்களில் நீடிக்காது என்பது உறுதியாகியுள்ளது.
இந்த விலை உயர்வுக்கு மிக முக்கியமான காரணமாக பார்க்கப்படுவது, சாதனங்களைத் தயாரிக்கப் பயன்படும் உதிரிபாகங்களின் (Component Costs) விலை அதிகரிப்புதான். தற்போது உலகம் முழுவதும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது. குறிப்பாக, ‘ஜெனரேட்டிவ் ஏஐ’ (Generative AI) தொழில்நுட்பத்தின் விரிவாக்கம் காரணமாக, டேட்டா சென்டர்கள் மற்றும் ஏஐ ஆக்ஸலரேட்டர்களில் பயன்படுத்தப்படும் உயர் அலைவரிசை நினைவகங்களுக்கான (High Bandwidth Memory) தேவை பலமடங்கு அதிகரித்துள்ளது.
இத்தகைய அதீத தேவையால், ரேம் (RAM) உள்ளிட்ட நினைவக சிப்புகளின் விலை கடும் அழுத்தத்தை சந்தித்து வருகிறது. ஏஐ தொழில்நுட்பத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படுவதால், சாதாரண நுகர்வோர் பயன்படுத்தும் மின்னணு சாதனங்களுக்கான உதிரிபாகங்களின் தட்டுப்பாடு அதிகரித்து, அதன் விளைவாக விலையும் உயர்கிறது. இதனால், புதிய கேட்ஜெட்டுகளை வாங்கத் திட்டமிட்டுள்ளவர்கள், இந்த விலை உயர்வை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என தொழில்நுட்ப வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.



