இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவின் முக்கிய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மொபைல் ரீசார்ஜ் கட்டணங்களை 15 சதவீதம் உயர்த்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.. இந்த கட்டண உயர்வு, 2026 ஜூன் மாதத்தில் அமலுக்கு வரலாம் என்றும், இதனால் 2027 நிதியாண்டில் (FY27) டெலிகாம் துறையின் வருமான வளர்ச்சி விகிதம் இரட்டிப்பாகும் என்றும் கூறப்படுகிறது.
2026 ஜூனில் கட்டண உயர்வு
Jefferies என்ற நிதி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “இந்தியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளில் பெரிய அளவில் கட்டண மாற்றம் செய்யப்படவில்லை. பழைய போக்கை கருத்தில் கொண்டால், 2026 ஜூனில் மொபைல் டாரிஃப்கள் 15% உயரும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டண உயர்வுடன் மட்டும் அல்லாமல், இணைய பயன்பாடு அதிகரித்தல், ப்ரீபெய்டிலிருந்து போஸ்ட் பெய்டுக்கு மாற்றம், தரவு (Data) பயன்பாட்டின் அதிகரிப்பு
ஆகியவை சேர்ந்து ஒரு பயனரிடமிருந்து கிடைக்கும் சராசரி வருமானம் (ARPU) தொடர்ந்து உயர்ந்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
FY27-ல் வருமான வளர்ச்சி 16% ஆக உயரும்
ரீசார்ஜ் கட்டண உயர்வு மற்றும் விலை மாற்றங்கள் காரணமாக: FY26-ல் துறை வருமான வளர்ச்சி: 7% FY27-ல் எதிர்பார்க்கப்படும் வளர்ச்சி: 16% இதன் அடிப்படையில் FY27-ல் ARPU வளர்ச்சி சுமார் 14% இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. ஆனால், கட்டண உயர்வால் சில நுகர்வோர் செலவுகளை கட்டுப்படுத்த முயற்சிப்பதால், புதிய சந்தாதாரர்கள் சேரும் வேகம் குறையலாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா மீது தாக்கம்
ஜியோ தனிப்பட்ட முறையில் 10–20% வரை கூடுதல் கட்டண உயர்வை மேற்கொள்ளலாம். இதன் நோக்கம், ஏர்டெல் நிறுவனத்துடன் மதிப்பீட்டை சமமாக்கி, முதலீட்டாளர்களுக்கு இரட்டை இலக்க வருமானம் வழங்குதல்.
வோடபோன்
கடன் சுமையில் சிக்கியுள்ள VIL-க்கு நிலை மிகவும் சிக்கலானது. FY27 முதல் FY30 வரை, மொபைல் சேவை கட்டணங்களை மொத்தமாக 45% உயர்த்த வேண்டிய அவசியம் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.. தற்போது அரசு, அந்நிறுவன ஏஜிஆர் (Adjusted Gross Revenue (AGR) நிலுவைத் தொகை – ரூ.87,695 கோடி என்ற கணக்கை உறைபடுத்தியுள்ளது. இதற்கான பணம் செலுத்துதல் FY32-ல் தொடங்கி FY41-ல் முடியும். முன்மொழியப்பட்ட 5 ஆண்டு தள்ளிவைப்பு (moratorium) கிடைத்தால், FY30 வரை அரசுக்குச் செலுத்த வேண்டிய தொகை 35–85% வரை குறையலாம். அதற்குப் பிறகும், வோடபோன் ஐடியா நிறுவனம் தனது நெட்வொர்க் முதலீடுகளைத் தொடர மிகப்பெரிய கட்டண உயர்வுகள், மேலும் கடன் அல்லது ஈக்விட்டி முதலீடு என அனைத்தும் தேவைப்படும் நிலை தொடரும்.
5G முதலீடுகள் முடிவடைவதால் செலவு குறையும்
முக்கியமான 5G கட்டமைப்பு பணிகள் பெரும்பாலும் முடிவடைந்துள்ளதால், டெலிகாம் நிறுவனங்களின் மூலதனச் செலவு (Capex) இனி மிதமாக இருக்கும். இதனால் லாப விகிதம் மேம்படும் என ஆய்வாளர்கள் நம்புகின்றனர். FY27 வரை 5G செலவுகள் கட்டுப்பாட்டில் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
2026 ஜூனில் மொபைல் ரீசார்ஜ் கட்டணங்கள் 15% உயரும் வாய்ப்பு அதிகம். இதனால் FY27-ல் டெலிகாம் துறை வருமானம் இரட்டிப்பு வேகத்தில் வளரும். ஜியோ, ஏர்டெல் நிறுவனங்கள் லாபத்தை அதிகரிக்க வாய்ப்புள்ளது.. எனினும் வோடபோன் ஐடியா நிறுவனத்திற்கு கடுமையான சவால்கள் தொடரும் என்று கூறப்படுகிறது..



