தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அதன்படி, தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் மீண்டும் கூட்டணியாக இணைந்து சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்க உள்ளன.
மறுபுறம் அதிமுக பாஜக கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்க உள்ளது. சீமானின் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுவதாக அறிவித்த நிலையில், விஜயின் தவெகவின் கூட்டணி நிலைபாடு இனிவரும் காலங்களிலே தெரியவரும். இதனிடையே கரூர் கூட்ட நெரிசலில் நிகழ்ந்த உயிரிழப்புகள் தமிழக வெற்றி கழகத்திற்கு பெரும் பின்னடைவாக மாறியது.
அதிலிருந்து தமிழக வெற்றிக் கழகம் தற்போது மீண்டு வருகிறது. அந்தவகையில் திமுக, அதிமுகவை போன்று தமிழக வெற்றிக் கழகமும் மாற்றுக்கட்சியினரை இணைக்கும் புதிய ஃபார்முலாவை கையில் எடுத்துள்ளது. இந்நிலையில் விழுப்புரத்தில் தவெக மாவட்ட பொறுப்பாளர்கள் முன்னிலையில் 300-க்கும் மேற்பட்ட மாற்றுக்கட்சியினர் தவெக கட்சியில் இணைந்துள்ளனர்.
தொண்டர்களிடம் கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும் என விஜய் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. கரூர் சம்பவத்தால் முடங்கிப் போன தமிழக வெற்றிக்கழகம் மீண்டும் தேர்தலை நோக்கிய நடவடிக்கையில் இறங்கியது தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.