கேரளாவில், இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஒருவரை காவல் நிலையத்தில் வைத்து போலீசார் கடுமையாக தாக்கியது தொடர்பான வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, உதவி ஆய்வாளர் உட்பட நான்கு போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் குன்னங்குளம் பகுதியைச் சேர்ந்த வி.எஸ். சுஜித் என்பவர், செவனூர் மண்டல இளைஞர் காங்கிரஸ் தலைவராகவும், கோயில் பூசாரியாகவும் இருந்து வருகிறார். இந்நிலையில், சுஜித் கடந்த 2023 ஏப்ரல் 5-ஆம் தேதி, சாலையில் நின்று தனது நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த உதவி ஆய்வாளர் நுஹ்மான் என்பவர் அவர்களை தகாத வார்த்தைகளால் கடுமையாக திட்டி, அங்கிருந்து விரட்டியடித்ததாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சுஜித்தை, போலீசார் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர், அங்கு வைத்து சுஜித்தை கடுமையாக தாக்கியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, சுஜித் மது அருந்திவிட்டு போலீசாரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால், அவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், மருத்துவப் பரிசோதனையில் அவர் மது அருந்தவில்லை என்பது தெரிய வந்ததால், அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
இதையடுத்து, தன்னைத் தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென சுஜித் நீதிமன்றத்தை அணுகினார். இதற்கிடையே, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், குன்னங்குளம் காவல் நிலையத்தின் சிசிடிவி காட்சிகளை சுஜித் பெற்றுள்ளார். அந்த வீடியோவில், காவல் நிலையத்தில் வைத்து போலீசார் சுஜித்தை கொடூரமாக தாக்கியுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவிய நிலையில், மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியது.
இதனைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் குதித்தனர். இதன் விளைவாக, சுஜித்தைத் தாக்கிய உதவி ஆய்வாளர் நுஹ்மான், சஜீவன், சந்தீப் மற்றும் சசிதரன் ஆகிய 4 பேரையும் பணியிடை நீக்கம் செய்து கேரள டி.ஜி.பி. ரமதா சந்திரசேகர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இச்சம்பவம் கேரளாவில் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



