உயிரை பணயம் வைத்து சேவையாற்றியவர்களை தவிக்கவிடலாமா? தமிழக அரசுக்கு ஐகோர்ட் கிளை குட்டு!

dc Cover 4ue75ephnt382p47rlain39m41 20160218071059.Medi

மதுரை உள்பட பல்வேறு மாவட்டங்களில் அரசு மருத்துவர்களாக பணியாற்றி 2009-ஆம் ஆண்டுக்கு முன் ஓய்வு பெற்றவர்களின் ஓய்வூதியம் தவறாக கணக்கிடப்பட்டதாக கூறி, அதனை குறைத்து தமிழக அரசு கடந்த ஆண்டு அரசாணை ஒன்றை பிறப்பித்தது. ஏற்கெனவே முறைப்படி வழங்கப்பட்டு வந்த ஓய்வூதியத்தை பறிக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரி, 143 ஓய்வு பெற்ற அரசு மருத்துவர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுவோர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, மருத்துவர்களின் ஓய்வூதியத்தை குறைக்கும் அரசாணையை ரத்து செய்து கடந்த 2025-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.


தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் 5 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், ஆர்.சக்திவேல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தன. அப்போது மருத்துவர்கள் தரப்பில், “அரசாணை மூலம் முறைப்படி வழங்கப்பட்ட சட்டப்பூர்வ உரிமையையே மனுதாரர்கள் கேட்கின்றனர். நிதிச்சுமையை காரணம் காட்டி ஏற்கெனவே வழங்கப்பட்ட உரிமையை மறுப்பது சட்டவிரோதம். 2009-ல் ஓய்வு பெற்ற இவர்கள் தற்போது 76 வயதை எட்டியுள்ளனர். இவர்களில் 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துவிட்ட நிலையில், குடும்ப ஓய்வூதியம் மட்டுமே பெற்று வரும் மூத்த குடிமக்களுக்கு இழைக்கப்படும் அநீதி இது” என்று வாதிடப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுக்களை முற்றிலுமாக தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தனர். தங்கள் உத்தரவில் நீதிபதிகள் தெரிவித்ததாவது:

“ஓய்வூதியம் என்பது ஒரு ஊழியரின் சொத்துரிமைக்கு இணையான நிலைபெற்ற உரிமை. ஓய்வு பெற்ற அரசு மருத்துவர்கள் எந்த தவறும் செய்யாத நிலையில், நிர்வாக ரீதியான காரணங்களை கூறி அவர்களின் ஓய்வூதியத்தை கடுமையாக குறைப்பது ஏற்புடையதல்ல. கொடிய தொற்றுநோய்கள் பரவிய காலங்களில் கூட தங்கள் உயிரை துச்சமாக மதித்து அர்ப்பணிப்புடன் பணியாற்றியவர்கள் மருத்துவர்கள். ஆயிரக்கணக்கான ஏழை எளிய மக்களின் உயிரை காத்த அவர்களின் மகத்தான சேவையை குறைத்து மதிப்பிடுவது பெரும் மனவேதனையை தரும்.

ஓய்வூதியதாரர்களுக்கு பணம் வழங்குவதால் அரசுக்கு ரூ.300 கோடி நிதிச்சுமை ஏற்படும் என்று அரசு தரப்பில் கூறப்படுவது ஒரு கற்பனையான எண்ணிக்கை மட்டுமே. அதிகாரிகளின் தனிப்பட்ட விருப்பங்களுக்காக ஓய்வூதியத்தை குறைக்க முடியாது. ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத்தில் 50 சதவீதம் மட்டுமே குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படுகிறது. வயோதிகத்தில் தவிக்கும் முதியவர்களையும், அவர்களது குடும்பங்களையும் கைவிடாமல் பாதுகாக்க வேண்டிய தார்மீக கடமை அரசுக்கு உண்டு. 1978-ஆம் ஆண்டு தமிழ்நாடு ஓய்வூதிய விதிகளில் எவ்வித சட்டப்பூர்வ திருத்தமும் செய்யாமல், வெறும் நிர்வாக அரசாணை மூலம் ஓய்வூதிய உரிமையை பறிக்க முடியாது. எனவே, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு உறுதி செய்யப்படுகிறது” என்று நீதிபதிகள் திட்டவட்டமாக குறிப்பிட்டனர்.

Read More : தமிழகத்தில் வாரம் 2 நாட்கள் கடன் முகாம்.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

Next Post

BIG BREAKING | தமிழ்நாட்டுக்கு முழு நேர ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் நியமனம்! ஜனாதிபதி உத்தரவு!

Mon Oct 12 , 2026
தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்பட நாட்டின் 6 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்து குடியரசு தலைவர் உத்தரவிட்டுள்ளார். குடியரசு தலைவர் மாளிகை வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, பல்வேறு மாநில ஆளுநர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதுடன், புதிய ஆளுநர்களும் பொறுப்பேற்க உள்ளனர். அதன்படி, தற்போது கேரள மாநில ஆளுநராக பதவி வகித்து வரும் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தமிழ்நாட்டின் முழு நேர ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். சிக்கிம் மாநில ஆளுநராக உள்ள ஓம் பிரகாஷ் […]
tn governor arlegar

You May Like