200க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற டெல்லி-ஸ்ரீநகர் ஸ்பைஸ்ஜெட் விமானம், இன்று ஸ்ரீநகர் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கியது. பயணிகள் அல்லது பணியாளர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியது என்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
SG 385 விமானம், நான்கு குழந்தைகள் மற்றும் ஏழு பணியாளர்கள் உட்பட 205 பயணிகளுடன் டெல்லியில் இருந்து ஸ்ரீநகருக்குச் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரேன காற்று அழுத்தத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக அவசரநிலை ஏற்பட்டதாக குழுவினர் தெரிவித்தனர். விமானம் பிற்பகல் 3:27 மணிக்கு பாதுகாப்பாக தரையிறங்கியது.
“விமானத்தில் இருந்த பயணிகள் அல்லது பணியாளர்கள் எந்த மருத்துவ உதவியும் கோரவில்லை” என்று அதிகாரிகள் தெரிவித்தனர். விமானம் தேவையான ஆய்வுக்கு உட்படுத்தப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
இதனிடையே, ஜூலை மாதம் ஸ்ரீநகர் விமான நிலையத்தில் தனது ஊழியர்களைத் தாக்கியதாகக் கூறப்படும் மூத்த ராணுவ அதிகாரிக்கு ஸ்பைஸ்ஜெட் 5 ஆண்டுகள் பறக்கத் தடை விதித்தது. ஜூலை 26 ஆம் தேதி ஸ்ரீநகர் சர்வதேச விமான நிலையத்தில் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் 4 ஊழியர்களைத் தாக்கிய குற்றச்சாட்டில் ராணுவ அதிகாரி மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாக செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய ஸ்பைஸ்ஜெட் அதிகாரிகள், 5 ஆண்டுகளுக்கு விமானத்தில் பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த காலகட்டத்தில் விமான நிறுவனம் இயக்கும் உள்நாட்டு, சர்வதேச அல்லது திட்டமிடப்படாத விமானங்களில் பயணிக்க அந்த அதிகாரி தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
மூத்த ராணுவ அதிகாரி, ஜூலை 26 ஆம் தேதி ஸ்ரீநகர் விமான நிலையத்தில் நான்கு விமான நிறுவன தரை ஊழியர்களைத் தாக்கியதாகவும், அவர்களில் ஒருவருக்கு முதுகெலும்பு முறிவு ஏற்பட்டதாகவும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. உள்ளூர் காவல்துறையில் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது, மேலும் சிவில் விமானப் போக்குவரத்து விதிமுறைகளின்படி பயணியை விமானப் பயணத் தடை பட்டியலில் சேர்க்கும் செயல்முறையை விமான நிறுவனம் தொடங்கியது. கூடுதல் கேபின் சாமான்களுக்கு பணம் செலுத்துமாறு பயணியிடம் கூறப்பட்டதைத் தொடர்ந்து இந்த தாக்குதல் நடந்ததாக ஸ்பைஸ்ஜெட் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஸ்பைஸ்ஜெட் ஊழியர்களைத் தாக்கியதற்காக அதிகாரி மீது பிஎன்எஸ் பிரிவு 115 இன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
Read More : இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி உயர்வு.. எத்தனை சதவீதம்? ஆச்சர்ய முடிவுகள்..