இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடுகிறது. இதன் முதலாவது போட்டி பஞ்சாப் மாநிலம் மொகாலியில் நேற்றிரவு நடந்தது. முதலில் விளையாடிய இந்திய அணியில், கேப்டன் ரோகித் சர்மாவும், கே.எல்.ராகுலும் ஓப்பனர்களாக களமிறங்கினர். பேட்டிங்குக்கு சாதகமான இந்த ஆடுகளத்தில் ரோகித் சர்மா (11 ரன்) ஹேசில்வுட்டின் பந்து வீச்சில் கேட்ச் ஆனார். இதே போல் அடுத்து வந்த விராட் கோலி 2 ரன்னில் கேட்ச்சாகி ஏமாற்றம் அளித்தார்.
பின்னர் கே.எல்.ராகுலும், சூர்யகுமார் யாதவும் கைகோர்த்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். 11.4 ஓவர்களில் இந்தியா 100 ரன்களை தொட்டது. தொடர்ந்து, ராகுல் 55 ரன்களில் ஆட்டமிழந்தார். தனது 18-வது அரைசதத்தை எட்டிய ராகுல், 20 ஓவர் போட்டியில் 2 ஆயிரம் ரன்களையும் கடந்து அசத்தினார். மறுமுனையில் ஆடம் ஜம்பாவின் சுழலில் அடுத்தடுத்து 2 சிக்சர் பறக்க விட்ட சூர்யகுமார் யாதவ் 46 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா அதிரடி காட்டினார். கடைசி 3 பந்துகளை தொடர்ச்சியாக சிக்சருக்கு தெறிக்கவிட்டு 200 ரன்களை தாண்ட வைத்தார். 20 ஓவர் முடிவில் இந்தியா 6 விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியாவின் சிறந்த ஸ்கோர் இதுவாகும். சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் தனது அதிகபட்ச ரன்னை பதிவு செய்த ஹர்திக் பாண்டியா 71 ரன்களுடனும், ஹர்ஷல் பட்டேல் 7 ரன்னுடனும் அவுட் ஆகாமல் இருந்தனர்.
209 ரன்கள் என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா அணி களமிறங்கியது. கேப்டன் ஆரோன் பிஞ்ச் சிக்சருடன் இன்னிங்சை அட்டகாசமாக தொடங்கி வைத்தார். மற்றொரு தொடக்க வீரர் கேமரூன் கிரீன், உமேஷ் யாதவின் ஒரே ஓவரில் 4 பவுண்டரி அடித்தார். அந்த அணி 9.2 ஓவர்களில் 100 ரன்களை அடைந்தது. கேமரூன் கிரீன் 61 ரன்கள் விளாசினார். தொடர்ந்து சுமித் 35 ரன்களிலும், மேக்ஸ்வெல் ஒரு ரன்னிலும், ஜோஷ் இங்லிஸ் 17 ரன்னிலும் வெளியேறினர். ஆஸ்திரேலிய அணி 19.2 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 211 ரன்கள் குவித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 2-வது 20 ஓவர் போட்டி வருகிற 23ஆம் தேதி நாக்பூரில் நடைபெற உள்ளது.