தனக்கு ஓய்வு அளிக்கப்பட்ட பயிற்சிப் போட்டியில், முன்னாள் கேப்டன் என்கிற எவ்வித கவுரவமும் பார்க்கமால் தோனி செய்த செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
டி20 உலகக்கோப்பை தொடரின் முதல் சுற்று போட்டிகள் நேற்று தொடங்கிய நிலையில், சூப்பர் 12 சுற்று போட்டிகள் வரும் அக். 22ஆம் தேதி முதல் தொடங்குகிறது. அதற்கு தயாராகும் வகையில் பயிற்சி போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்திய அணி தனது முதல் பயிற்சி போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டு வருகிறது. பயிற்சி போட்டிகளை பொறுத்தவரையில் இதற்கு முதல்தர போட்டிக்கான அந்தஸ்து கிடையாது என்பதால், முன்பெல்லாம் இந்த போட்டிகள் டிவியில் ஒளிபரப்பு செய்யப்படுவது கிடையாது. ஆனால் தற்போது அந்த நிலைமை மாறிவிட்டது. முதல்தர போட்டிக்கு இணையாக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு பயிற்சி போட்டிகள் டிவி, ஓடிடிக்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகின்றன.

அந்த வகையில், 2017 சாம்பியன்ஸ் டிராபி தொடரின்போது நடந்த ஒரு சம்பவம் ரசிகர்களால் நினைவு கூரப்பட்டு வருகிறது. 2017 சாம்பியன்ஸ் டிராபி தொடங்குவதற்கு முன், இந்திய அணி ஒரு பயிற்சி ஆட்டத்தில் வங்கதேச அணியை எதிர்கொண்டது. கேப்டன் பொறுப்பிலிருந்து விலகிய பின் எம்.எஸ். தோனி விளையாடிய முக்கியமான தொடர் அது. அந்த பயிற்சி ஆட்டத்தில் தோனிக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருந்தது. அப்போது, போட்டியின் நடுவே தோனி இந்திய அணி வீரர்களுக்கு தண்ணீர் கொண்டு சென்றார். பொதுவாக இந்த வேலையை அணியில் உள்ள இளம் வீரர்கள் செய்வார்கள். ஆனால், தனக்கு ஓய்வு அளிக்கப்பட்ட பயிற்சிப் போட்டியில், முன்னாள் கேப்டன் என்கிற எவ்வித கவுரவமும் பார்க்காமல் தோனி செய்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

தோனி இவ்வாறு செய்தது இது முதல்முறை அல்ல. 2012இல் நடந்த இலங்கை மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முத்தரப்பு தொடரின்போதும் தோனி வாட்டர்பாயாக மாறினார். அதேபோல் 2018ஆம் ஆண்டு அயர்லாந்துக்கு எதிரான டி20 போட்டியின்போது கிட்பேக் மற்றும் தண்ணீர் பாட்டிலுடன் மைதானத்திற்குள் வந்த தோனி, ரெய்னாவுக்கு தண்ணீர் கொடுத்தார். தோனி மைதானத்திற்குள் வந்ததும் ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர். வீரர்களுக்கு தண்ணீர் கொடுத்துவிட்டு, ரசிகர்களை பார்த்து புன்னைகைத்துவிட்டு தோனி சென்றார்.

2019ஆம் ஆண்டு நடந்த ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதின. அந்த போட்டியில் 50 ரன்கள் எடுத்த நிலையில், தோனி ரன் அவுட் ஆனார். அவர் ஆட்டமிழந்தும் இந்தியாவின் உலகக்கோப்பை கனவு தகர்ந்தது. இதுவே அவரது கடைசி சர்வதேச கிரிக்கெட் போட்டியாக அமைந்துவிட்டது. அதற்கு அடுத்த ஆண்டில், அதாவது 2020இல் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தாம் ஓய்வு பெறுவதாக அறிவித்தார் தோனி.