வரும் 16-ம் தேதி ஆஸ்திரேலியாவில் தொடங்க உள்ள டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுவிட்டது. ரோகித் சர்மா தலைமையிலான இந்த அணியில் இடம்பிடித்திருந்த பும்ரா, காயம் காரணமாக உலகக் கோப்பை அணியில் இருந்து விலகினார். கடந்த வாரம் 14 வீரர்களுடன் ஆஸ்திரேலியா புறப்பட்டது இந்திய அணி.
கடந்த டி20 தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டு போட்டிகளில் பும்ரா விளையாடினார். அதற்கு அடுத்ததாக திருவனந்தபுரத்தில் நடைபெற்ற தென்னாபிரிக்க அணிக்கு எதிரான முதல் டி20 போட்டிக்கு முன்பு, பயிற்சி ஈடுபட்டபோது, முதுகு பகுதியில் அசைவுகரிமாகவும் வலியும் ஏற்பட்டதால் உடனடியாக இந்திய அணியின் மருத்துவ குழுவினரிடம் தெரிவிக்கப்பட்டது. மருத்துவ அறிக்கையின்படி, பும்ரா டி20 உலக கோப்பை அணியில் இருந்து விலக்கப்பட்டார். இதற்கு மாற்று வீரர் யார்? டெத் ஓவர்களை சமாளிப்பது யார்? என பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டு வந்தன. மேலும் ரிசர்வ் வரிசையில் முகமது சமி மற்றும் தீபக் சகர் இருவரும் இருந்தனர். அவர்களில் ஒருவர் பும்ராவிற்கு மாற்று வீரராக இருப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.
தீபச் சகர், தென்னாப்பிரிக்கா ஒருநாள் தொடரின் போது கணுக்கால் பிசகியதால் அணியிலிருந்து விலகி இருக்கிறார். இந்நிலையில் ரிசர்வ் வரிசையில் உள்ள முகமது சமி டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். பிரிஸ்பேனில் நடைபெற உள்ள வார்ம் அப் போட்டிகளுக்கு முன்னர் அவர் இந்திய அணியுடன் இணைவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது தீபச் சகர்க்கு பதில் ரிசர்வ் வரிசையில் முகமது சிராஜ் மற்றும் ஷர்துல் தாக்கூர் இருவரும் சேர்க்கப்பட்டிருக்கின்றனர். இவர்களும் விரைவில் ஆஸ்திரேலியா செல்கின்றனர். என பிசிசிஐ மேல்மட்டக்குழு அறிவித்துள்ளது.
அதன்படி இந்திய அணி: ரோகித் சர்மா (கேப்டன்), கே.எல்.ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, அஸ்வின், சாஹல், அக்சர் படேல், புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் படேல், அர்ஷ்தீப் சிங், முகமது ஷமி.