ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி ஹாங்காங்கை வீழ்த்தி சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. துபாயில் நேற்று நடைபெற்ற ஏ பிரிவு ஆட்டத்தில் இந்தியாவும் ஹாங்காங்கும் மோதின. முதலில் விளையாடிய இந்திய அணி மந்தமான ஆடுகளம் காரணமாக ஆரம்பத்தில் விரைவாக ரன் சேர்க்க முடியாமல் தடுமாறியது. கே.எல்.ராகுல் 36 ரன்னுக்கும், ரோகித் சர்மா 21 ரன்னுக்கும் ஆட்டமிழந்தனர். விராட் கோலி 44 பந்துகளில் 59 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். சூர்யகுமார் யாதவ் இறுதிக்கட்டத்தில் விளாசித் தள்ளி 26 பந்தில் 6 பவுண்டரி, 6 சிக்சர் அடித்து 68 ரன் குவித்து இறுதி வரை களத்தில் இருந்தார்.
சூர்யகுமார் யாதவ் 20ஆவது ஓவரில் மட்டும் 4 சிக்சர்கள் உட்பட 26 ரன்கள் விளாசினார். இந்திய அணி 20 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 192 ரன் குவித்தது. கடினமான இலக்குடன் ஆடிய ஹாங்காங் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 152 ரன் மட்டுமே எடுத்து 40 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த அணியில் பாபர் ஹயாத் அதிகபட்சமாக 41 ரன் எடுத்தார். இந்த வெற்றி மூலம் ஏ பிரிவில் இந்திய அணி சூப்பர் 4 சுற்றுக்கு முதல் அணியாக தகுதி பெற்றது. பி பிரிவில் ஆப்கானிஸ்தான் ஏற்கனவே சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இன்று நடைபெறும் வங்கதேசம் – இலங்கை இடையிலான போட்டி முடிவில் இப்பிரிவிலிருந்து அடுத்த சுற்றுக்கு முன்னேறும் மற்றொரு அணி முடிவாகும்