ஜிம்பாப்வேக்கு எதிராக தனது சர்வதேச முதல் சதத்தை பதிவு செய்துள்ளார் இந்திய அணியின் இளம் பேட்ஸ்மேன் சுப்மன் கில்.
இந்தியா-ஜிம்பாப்வே இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் ஜிம்பாப்வேயில் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு போட்டிகளை முறையே 10 விக்கெட்டுகள் மற்றும் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றிருந்தது. தொடரையும் கைப்பற்றிவிட்டது. இந்நிலையில், தொடரின் மூன்றாவது மற்றும் கடைசி போட்டி இன்று பிற்பகல் 12.30 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஷிகர் தவான் மற்றும் கேப்டன் கேஎல் ராகுல் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி சீரான விகித்தில் ரன்களை சேர்த்தனர். கேஎல் ராகுல் 30 ரன்கள் மற்றும் ஷிகர் தவன் 40 ரன்கள் எடுத்திருந்த நிலையில், அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
பின்னர் ஜோடி சேர்ந்த சுப்மன் கில் மற்றும் இஷான் கிஷன் இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சிறப்பாக விளையாடிய இஷான் கிஷன் அரைசதம் அடித்து வெளியேறினார். அடுத்தடுத்து வந்த தீபக் ஹூடா, சஞ்சு சாம்சன் இருவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினாலும் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய சுப்மன் கில் சர்வதேச கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை அடித்தார். 97 பந்துகளில் 15 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்சர் விளாசிய சுப்மன் கில் 130 ரன்கள் அடித்து 49-வது ஓவரில் ஆட்டமிழந்தார். சுப்மன் கில்லின் அபாரமான ஆட்டத்தால் 50 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 289 ரன்கள் சேர்த்திருக்கிறது இந்திய அணி. இதையடுத்து, 290 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஜிம்பாப்வே அணி விளையாடி வருகிறது.
முதல் போட்டியில் 82 ரன்கள் அடித்த சுப்மன் கில் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். ஒடிஐ, டி20 மற்றும் டெஸ்ட் என மூன்று விதமான கிரிக்கெட்டிலும் சிறப்பாக செயல்பட்டு வரும் சுப்மன் கில்லை எதிர்வரும் 2023 ஒரு நாள் உலக கோப்பையில் பேக்கப் ஓப்பனராக ஆடவைக்க வேண்டும் என்று முன்னாள் இந்திய அணி தேர்வாளர் சபா கரீம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. இளம் வளதில் வெளிநாட்டு மண்ணில் சதம் விளாசிய 3-வது வீரராக சுப்மன் கில் இடம்பெற்றார். மூன்றாவது இடத்தில் இருந்த ரோகித் சர்மாவை பின்னுக்கு தள்ளியுள்ளார். ரோகித் சர்மா 23 வயது 28 நாட்களில் முதல் சதத்தை பதிவு செய்திருந்த நிலையில், சுப்மன் கில் 22 வயது 348 நாட்களில் சதம் விளாசி அவரை பின்னுக்கு தள்ளினார். முதலிடத்தில் யுவராஜ் உள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தனது 22 வயது 41-வது நாளில் சதத்தை பதிவு செய்தார் யுவராஜ். இரண்டாம் இடத்தில் உள்ள விராட் கோலி 22 வயது 315 நாட்களில் இங்கிலாந்துக்கு எதிராக சதம் விளாசினார்.