அஸ்வின் போன்ற திறமையான சுழற்பந்து வீச்சாளரை டெஸ்ட் அணியில் சேர்க்காமல் உட்கார வைக்கும் போது, டி20 அணியில் இருந்து விராட் கோலியை ஏன் நீக்க முடியாது? என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து, முன்னாள் கேப்டன் கபில் தேவ் கூறுகையில், ”டெஸ்ட் போட்டிகளில் 450 விக்கெட்டுகளை வீழ்த்திய அஸ்வினையே நீக்க முடியும் போது, டி20 அணியில் இருந்து கோலியை ஏன் நீக்கக் கூடாது என கேள்வி எழுப்பியுள்ளார். உலக தரவரிசையில் 2ஆம் இடத்தில் இருக்கும் அஸ்வினை டெஸ்ட் அணியில் தேர்வு செய்யாமல் உட்கார வைக்க முடியுமெனில், விராட் கோலியை டி20 அணியில் எடுக்காமல் பெஞ்சில் உட்கார வைக்கவும் முடியும் என கூறியுள்ளார். விராட் கோலி தற்போது ஃபார்மில் இல்லை எனும்போது அவருக்காக நன்றாக ஆடும் இளம் வீரர்களை உட்கார வைக்கக் கூடாது எனவும், விராட் கோலியை அணிக்குள் வர விடாமல் தங்கள் ஆட்டத்தை நிரூபிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
சிறப்பாக விளையாடாத கோலி அணியில் தொடர்ந்து நீடிப்பதால், இளைஞர்களுக்கு வாய்ப்பு கிடைப்பது சவாலாக உள்ளது. ஒரு வீரர் தொடர்ந்து 5 போட்டிகளில் சொதப்பினால் அவர் எத்தனை பெருமை கொண்டவராக இருந்தாலும் தொடர்ந்து விளையாட வாய்ப்பு வழங்க முடியாது. எனவே, அப்படிப்பட்ட வீரரை நீக்கினால்தான் சிறப்பாக விளையாடும் வீரருக்கு வாய்ப்பு வழங்க முடியும். மேலும், தற்போதைய பார்மின் அடிப்படையில்தான் விளையாடும் 11 வீரர்களைத் தேர்வு செய்ய வேண்டும். செல்வாக்கின் அடிப்படையில் அணியைத் தேர்வு செய்யக் கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.