எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். அவர்களின் படகு பறிமுதல் செய்துள்ளனர்.
ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 88 படகுகளில் சுமார் 400 மீனவர்கள் நேற்று முன்தினம் கடலுக்குச் சென்றனர். தலைமன்னார் மற்றும் தனுஷ்கோடி இடையே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, இலங்கை கடற்படை ரோந்துக் கப்பல் அவர்களை வழிமறித்தது. முனியசாமி என்ற மீனவருக்குச் சொந்தமான படகை கடற்படை பறிமுதல் செய்து, அதில் இருந்த நான்கு பேரையும் கடல் எல்லையை மீறியதற்காக கைது செய்தது. முதற்கட்ட விசாரணைக்குப் பிறகு, கைது செய்யப்பட்ட மீனவர்கள் விசாரணைக்காக மன்னார் மீன்வளத் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.
கடந்த ஜனவரி மாதம் முதல், எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக, 185 மீனவர்களைக் கைது செய்து 25 படகுகளையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர். கடந்த ஜூன் 29ம் தேதி இதேபோன்ற ஒரு சம்பவத்தில், ராமேஸ்வரத்தைச் சேர்ந்த எட்டு மீனவர்கள் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.