திருப்பனந்தாள் காசி மடத்தின் 21வது அதிபர் ஸ்ரீலஸ்ரீ முத்துக்குமார சுவாமி தம்பிரான் சுவாமிகள் காலமானார்.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் தாலுக்கா திருப்பனந்தாளில் உள்ள காசி திருமடம், சைவம், தமிழ், கலை, இலக்கியம் மற்றும் சமூகப்பணிகளில் பெரும் பங்களிப்பை ஆற்றி வரும் முக்கிய ஆன்மிக மையமாக திகழ்கிறது. இந்த மடத்தின் 21வது அதிபராக கயிலை மாமுனிவ ஸ்ரீலஸ்ரீ காசிவாசி எஜமான் சுவாமிகள் (முத்துக்குமார தம்பிரான் சுவாமிகள்) 1972ஆம் ஆண்டு பொறுப்பேற்றார்.
அவர் 1958ஆம் ஆண்டு துறவறம் ஏற்று, சில காலம் இளவரசராகப் பணியாற்றிய பின், 95 ஆண்டுகளாக ஆன்மிக சேவையில் ஈடுபட்டார். சைவமும் தமிழும் என்ற இரு கண்களை முன்வைத்து, திருமுறைகளை தினமும் இடையீடின்றி பாராயணம் செய்தவர். 50 ஆண்டுகளுக்கும் மேலாக காசிமடத்தை பொற்கால வளர்ச்சியடையச் செய்தார். 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த காசிமடத்தின் பரப்பை விரிவாக்கம் செய்து, கலை, இலக்கியம், சமூகப் பணிகளில் முன்னேற்றம் எய்தச் செய்தார்.
கடந்த ஒரு மாதமாக உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று (ஆகஸ்ட் 19) இரவு 8 மணியளவில் திருப்பனந்தாள் மடத்தில் காலமானார். அவரது நல்லடக்கம் இன்று மாலை திருப்பனந்தாள் மேற்குத்தெருவில் உள்ள குரு மடத்தில் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு முக்கிய ஆதீனங்கள், மதகுருக்கள், அரசியல் மற்றும் சமூக பிரமுகர்கள் அஞ்சலி செலுத்த உள்ளனர்.