மத்திய பணியாளர் தேர்வாணையம் பன்முகத் திறன் (தொழில்நுட்பம் அல்லாத) பணி மற்றும் ஹவில்தார் பணிக்கான தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பன்முகத் திறன் (தொழில்நுட்பம் அல்லாத) பணியாளர் மற்றும் ஹவில்தார் பணிக்கான தேர்வு 2025 குறித்து மத்திய பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், துறைகள் மற்றும் பல்வேறு அரசியலமைப்பு நிறுவனங்கள், சட்டப்பூர்வ அமைப்புகள், தீர்ப்பாயங்களில் பன்முகத்திறன் பணியாளராக பணி புரிவதற்கும், நிதியமைச்சகத்தின் வருவாய்துறையின் கீழ் உள்ள மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்கத்துறை, மத்திய போதைப்பொருள் தடுப்பு அமைப்பில் ஹவில்தார் பணிக்காகவும் திறந்தநிலை போட்டித் தேர்வை ஆணையம் நடத்தவுள்ளது.
நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் விண்ணப்பதாரர்கள் இந்த தேர்வில் விண்ணப்பிக்க தகுதி பெறுகிறார்கள். பதவி விவரங்கள், வயது வரம்பு, அத்தியாவசிய கல்வித் தகுதி, செலுத்த வேண்டிய கட்டணம், தேர்வுத் திட்டம், விண்ணப்பிக்கும் முறை போன்ற தகவல்கள் பணியமர்த்தல் தொடர்பான அறிவிப்பில் விரிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் வலைத்தளமான ssc.gov.in அல்லது ஆண்ட்ராய்டு செல்பேசிகளில் ‘mySSC’ என்ற செயலி மூலம் இணையவழியில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.
இவ்வாறு விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி 24.07.2025 (இரவு 11:00 மணி) ஆக அறிவிக்கப்பட்டுள்ளது. இணையவழியில் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி 25.07.2025 (இரவு 11:00 மணி) ஆகும். ஆந்திராவில் 13 மையங்கள், புதுச்சேரியில் 01 மையம், தமிழ்நாட்டில் 8 மையங்கள், தெலங்கானாவில் 3 மையங்கள் உட்பட, தென் மண்டலத்தில் 25 மையங்கள்/நகரங்களில் கணினி அடிப்படையிலான தேர்வு வரும் செப்டம்பர், அக்டாபர் மாதங்களில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.