கர்நாடகா மாநிலத்தில் ஒரு பெண் தனது வளர்ப்பு மகளை மாடியில் இருந்து தள்ளிவிட்டு கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகிறது.
இந்த சம்பவம் ஆகஸ்ட் 27 ஆம் தேதி ஆதர்ஷ் காலனியில் நடந்துள்ளது. சிறுமி விளையாடிக் கொண்டிருந்தபோது தற்செயலாக மூன்று மாடி கட்டிடத்தின் மொட்டை மாடியில் இருந்து விழுந்ததாக முதலில் கூறப்பட்டது. அதன் பின்னர் தன் குழந்தையின் மரணத்தில் சந்தேகம் இருப்பதை உணர்ந்த தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
பக்கத்து வீட்டுக்காரரின் வீட்டிற்கு வெளியே சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டிருந்தது. அதை ஆய்வு செய்தபோது அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, ஷானவி என்ற அந்த சிறுமியை கணவரின் இரண்டாவது மனைவி மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்று, ஒரு நாற்காலியில் நிற்கச் சொல்லி, பின்னர் அவளைத் தள்ளிவிட்டு, தலையை குணிந்தபடி வீட்டிற்குள் செல்லும் காட்சிகள் இடம்பெற்றது.
சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் சிறுமியின் மாற்றாந்தாயிடம் விசாரணை நடத்தப்பட்டது. சொத்துக்காக அந்தப் பெண் சிறுமியைக் கொன்றதை ஒப்புக்கொண்டார். இதனையடுத்து ராதா மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.