போகி முன்னிட்டு டயர் உள்ளிட்ட பொருட்களை எரித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இது குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; தமிழர் திருநாளான பொங்கலுக்கு முதல் நாள் போகிப்பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்நாளில் சில பழைய பொருட்களை எரிப்பது வழக்கம். இந்நாளில் கிழிந்த பாய்கள், பழைய துணிகள், தேவையற்ற விவசாய கழிவுகள் ஆகியவற்றை தீயிட்டு கொளுத்துவார்கள். பெரும்பாலும் நமது கிராமங்களில் கடைபிடிக்கப்படும் இப்பழக்கம் சுற்றுச்சூழலுக்கு பெருந்தீமையை ஏற்படுத்தாத ஒன்றாகும்.
ஆனால் தற்சமயம் போகியன்று மக்கள் நெருக்கம் மிகுந்த நகரங்களில் டயர், ரப்பர், பிளாஸ்டிக் மற்றும் செயற்கை பொருட்களை எரிக்கையில் நச்சுப் புகைமூட்டம் ஏற்பட்டு பொதுமக்களுக்கு சுவாச நோய்கள், இருமல் மற்றும் நுரையீரல், கண், மூக்கு எரிச்சல் உட்பட பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றன. நச்சுப்புகை கலந்த பனி மூட்டத்தால் சாலை போக்குவரத்திற்கும் தடை ஏற்படுகிறது.
இதுபோன்ற செயல்களை தடை செய்த உயர்நீதிமன்றம் பழைய மரம், வறட்டிதவிர வேறு எதையும் எரிப்பதற்கு தடை விதித்தது, மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கலாம் என அறிவுறுத்தியுள்ளது. எனவே போகிப் பண்டிகையின் போது பழைய பொருட்கள் எரிப்பதை தவிர்த்து காற்றின் தரத்தை பாதுகாக்க பொதுமக்கள் ஒத்துழைக்குமாறும், பொங்கல் திருநாளை மகிழ்ச்சியுடனும், மாசு இல்லாமலும் கொண்டாடுவோம் என தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.